தமிழ்நாடு

புயல் நிவாரண நிதி மோசடி: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

23rd Feb 2021 12:56 PM

ADVERTISEMENT

 

ரூ.110 கோடி புயல் நிவாரண நிதியைத் தகுதியில்லாதவர்கள் மோசடியாகப் பெற்ற விவகாரம் குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த மீராராணி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அண்மையில் தமிழக கடலோர பகுதியைத் தாக்கிய புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. புயல் நிவாரண உதவிகளைத் தகுதியில்லாத பலர் மோசடியாக ரூ.110 கோடி வரை நிவாரண உதவியைப்  பெற்றுள்ளனர்.

இந்த மோசடி குறித்து புகார் தெரிவித்த பின்னர், தகுதியில்லாதவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.32 கோடி திரும்ப வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக இருந்த 80 அரசு ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி குறித்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மோசடியாக நிவாரண உதவியைப் பெற்றவர்களிடம் இருந்து தொகையைத் திரும்ப வசூலித்து, தகுதியானவர்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் குற்றச்சாட்டு குறித்து விசாரித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நிவாரண உதவி பெற்ற  தகுதியில்லாதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். இந்த மனுவுக்கு  தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 10 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags : HC Storm relief fund fraud
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT