தமிழ்நாடு

பேரவையில் முடிவை தெரிவிப்போம்: புதுவை முதல்வர் நாராயணசாமி

22nd Feb 2021 08:10 AM

ADVERTISEMENT

புதுவையில் மேலும் இரு எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, பெரும்பான்மையை இழந்துள்ள முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழும் நிலை உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை (பிப்.22) நடைபெறும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு, பெரும்பான்மையை நிரூபிப்பது குறித்த தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரியில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு ஆதரவளித்து வரும் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பதவி விலகி வரும் நிலையில், திங்கள்கிழமை காலை 10 மணிக்கு புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியுள்ளது.
ஆலோசனைக் கூட்டம்: முதல்வர் வே.நாராயணசாமி தலைமையில், காங்கிரஸ், கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்திலுள்ள அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வி.வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களான அரசுக் கொறடா அனந்தராமன், ஜெயமூர்த்தி, விஜயவேணி, திமுக எம்.எல்.ஏ.க்களான அந்தக் கட்சியின் மாநிலச் செயலர் இரா.சிவா, கீதாஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் வே.நாராயணசாமி கூறியதாவது: புதுவையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு பெரும்பான்மையை திங்கள்கிழமை (பிப்.22) நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டுள்ளதால், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருடன்ஆலோசனை நடத்தினோம்.
இறுதி முடிவு எப்போது?: கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணி அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதனால், திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்கும்போது, அங்கு ஆலோசனை நடத்தி இறுதி முடிவாக எங்களின் நிலைப்பாடு தெரியவரும் என்றார்முதல்வர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT