தமிழ்நாடு

புதுவை காங்கிரஸ் அரசு கவிழ்கிறது: மேலும் இரு எம்எல்ஏக்கள் ராஜிநாமா; பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல்

22nd Feb 2021 08:04 AM

ADVERTISEMENT

புதுவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏ.வும், கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) திடீரென தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர்.
 புதுவையில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களில் வென்றது. இதையடுத்து, திமுக உறுப்பினர்கள் 3 பேர், சுயேச்சை ஒருவர் என மொத்தம் 19 உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது.
 நெருக்கடி தொடங்கியது எப்படி?: முதல்வருக்கு எதிராக கருத்துக் கூறி வந்த பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. என்.தனவேல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, அமைச்சர்களாக இருந்த நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், எம்.எல்.ஏ.க்களான தீப்பாய்ந்தான், ஜான்குமார் ஆகியோர் அண்மையில் தங்களின் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் காங்கிரஸின் பலம் 14-ஆக குறைந்தது.
 காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏ.-க்கள் ராஜிநாமா: இந்த நிலையில், புதுச்சேரி பெருமாள் கோயில் வீதியில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்ற ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான க.லட்சுமிநாராயணன், தனது பதவியை ராஜிநாமா செய்து பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்துவிடம் கடிதம் அளித்தார். இதே போன்று காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான தட்டாஞ்சாவடி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. க.வெங்கடேசனும் தனது பதவியை ராஜிநாமா செய்து சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் கடிதம் அளித்தார்.
 அரசு கவிழும் நிலை ஏன்?: இதனால், புதுவை சட்டப்பேரவையில் புதுவை காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 12-ஆகக் குறைந்தது. என்.ஆர். காங்கிரஸ், பாஜக நியமன உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பலம் 14-ஆக உள்ளது; இதன் விளைவாக பெரும்பான்மையை நிரூபிக்க முயற்சித்து வரும் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
 நம்பிக்கை வாக்கெடுப்பு-இன்று கெடு: இதையடுத்து, எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் திங்கள்கிழமைக்குள் (பிப்.22) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 19-ஆம் தேதி உத்தரவிட்டார்.
 "மரியாதை இல்லை': பின்னர், க.லட்சுமிநாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் எனக்குரிய மரியாதையை ஆட்சியிலும், கட்சியிலும் வழங்கவில்லை. ஆனாலும், என்னால் இந்த அரசு கவிழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக பொறுமையாக இருந்தேன். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்பட 4 பேர் பல்வேறு காரணங்களுக்காக தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். தற்போதாவது எனது ஆதங்கத்தையும், வருத்தத்தையும் முதல்வர் மீதும், கட்சியின் மீதும், ஆட்சியின் மீதும் வெளிப்படுத்துவதற்காக பதவியை ராஜிநாமா செய்துள்ளேன் என்றார் அவர்.
 அதிருப்தி காரணமாக... வெங்கடேசனும் முதல்வர் நாராயணசாமி மீதான அதிருப்தி காரணமாக பதவி விலகியுள்ளதாகவும், லட்சுமிநாராயணன், வெங்கடேசன் ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
 பேரவையில்
 காங்கிரஸ் அரசின் பலம்
 காங்கிரஸ் 9
 திமுக 2
 சுயேச்சை 1
 மொத்தம் 12
 எதிர்க்கட்சிகளின் பலம்
 என்.ஆர். காங்கிரஸ் 7
 அதிமுக 4
 பாஜக
 நியமன உறுப்பினர்கள் 3
 மொத்தம் 14
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT