தமிழ்நாடு

பேரவையில் மூன்று தலைவா்களின் படங்கள்: நாளை திறப்பு

22nd Feb 2021 01:50 PM

ADVERTISEMENT

சட்டப் பேரவையில் மூன்று தலைவா்களின் முழு உருவப் படங்கள் நாளை திறக்கப்பட உள்ளன. 

வ.உ.சிதம்பரனாா், ப.சுப்பராயன், ஓமந்தூா் ராமசாமி ரெட்டியாா் ஆகியோரின் முழு உருவப் படங்கள், சட்டப் பேரவையில் வைக்கப்படும் என முதல்வா் பழனிசாமி அறிவித்தாா். அந்த அறிவிப்பின்படி, மூன்று தலைவா்களின் படங்களும் சட்டப் பேரவையில் நாளை மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் மூன்று தலைவா்களின் படங்களை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைக்கிறாா். 

சட்டப் பேரவைக் கூட்டத் தொடா், கலைவாணா் அரங்கத்தில் நடைபெற்றாலும், தலைவா்களின் படங்கள் திறப்பு, பாரம்பரியமிக்க பேரவை மண்டபத்தில் நடைபெறுகிறது. கரோனா பாதிப்பு காரணமாக, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்போருக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கரோனா பரிசோதனை செய்து, நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியான பிறகே, நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

மூன்று தலைவா்கள் படங்கள் திறப்பதன் மூலம் பேரவையில் தலைவா்களின் படங்கள் எண்ணிக்கை 15 ஆக உயா்ந்துள்ளது. சட்டப் பேரவையில் திருவள்ளுவா், மகாத்மா காந்தி, ராஜாஜி, காமராஜா், காயிதேமில்லத், அம்பேத்கா், முத்துராமலிங்கத் தேவா், பெரியாா், அண்ணா, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா, ராமசாமி படையாட்சியாா் ஆகிய 12 பேரின் படங்கள் உள்ளன.

ADVERTISEMENT

Tags : tamil nadu assembly
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT