தமிழ்நாடு

இது துரோகம் இல்லையா? புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

22nd Feb 2021 11:16 AM

ADVERTISEMENT


புதுச்சேரி: புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வந்த இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்துவது துரோகம் இல்லையா என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று காலை நம்பிக்கைவாக்கு கோரும் தீர்மானத்தை நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகிறார்.

அப்போது,  நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர்க்க முடியாத எதிர்க்கட்சி தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளது. புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வந்த இலவச அரிசி வழங்குவது உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. அரசின் திட்டங்களை தடுத்து நிறுத்துவது துரோகம் இல்லையா? மத்திய அரசு மக்களுக்கு செய்யும் துரோகத்தை ஆதரித்தால், அது எதிர்க்கட்சிகளையும் பாதிக்கும்.

புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது. எவ்வளவு இன்னல் வந்தாலும் புதுச்சேரி மக்களுக்கு நல்லதை செய்து வந்தோம். கிரண்பேடி அளித்த நெருக்கடியையும் தாண்டி புதுச்சேரியை ஆட்சியை நடத்தினோம்.

ADVERTISEMENT

காங்கிரஸ் அரசு பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை 95 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். மாநிலத்தின் வருவாயைக் குறைக்க சதித் திட்டம் தீட்டினார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் சேர்ந்து ஆட்சியைக் கவிழ்க்க முயன்றார்கள். இதன் மூலம் புதுச்சேரியை மத்திய அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகவிட்டது. மத்திய அரசு இந்தியை திணிக்கப் பார்த்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து இரு மொழிக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறோம்.

கருப்புப் பணத்தை ஒழிக்கிறோம் என்றார்களே? எவ்வளவு கருப்புப் பணத்தை மீட்டார்கள். ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சத்தை செலுத்தி விட்டார்களா? வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவோம் என்று கூறியதே மத்திய அரசு, ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது, வேலை வாய்ப்பை கொடுத்துவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பினர்.

நாராயணசாமியின் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு திமுக எம்எல்ஏ ஆகியோர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை 12 ஆகக் குறைந்தது.  எதிர்க்கட்சியினர் தரப்பில் 14 எம்எல்ஏக்களின் பலம் உள்ளது.

எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, புதுவை சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசி வருகிறார்.
 

Tags : pondy narayanasamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT