தமிழ்நாடு

புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது: சபாநாயகர்

22nd Feb 2021 11:22 AM

ADVERTISEMENT

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று அவைத் தலைவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது.

புதுவை சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். பின்னர் முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேறினர். இனால், முதல்வர் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

ADVERTISEMENT

நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது அவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 14 பேர் மட்டுமே அமர்ந்திருந்தனர். இதையடுத்து, நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு திமுக எம்எல்ஏ ஆகியோர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், சட்டப்பேரவையில் ஆளும் கட்சியின் பெரும்பான்மை 12 ஆகக் குறைந்தது.  எதிர்க்கட்சியினர் தரப்பில் 14 எம்எல்ஏக்களின் பலம் இருந்தது.

எதிர்க்கட்சியினர் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 22க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, புதுவை சட்டப்பேரவையில் இன்று சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது, பேரவையில் நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். அப்போது, மத்திய அரசு மீது நாராயணசாமி கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இறுதியாக, நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக சபாநாயகர் அறிவித்தார். 

இதனால், புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசு கவிழ்ந்தது.
 

Tags : congress புதுச்சேரி pondy narayanasamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT