தமிழ்நாடு

'வெற்றி நடைபோடும் தமிழகம்' விளம்பரத்தை எதிர்த்து வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

22nd Feb 2021 12:26 PM

ADVERTISEMENT

அதிமுக அரசின் சாதனைகளை வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில் அரசு செலவில் விளம்பரம் வெளியிடுவதை எதிர்த்த வழக்கில் தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், தமிழக அரசின் சார்பில், அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு, வெற்றி நடைபோடும் தமிழகம் என்ற தலைப்பில், பத்திரிகை, தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடப்படுகிறது. இந்த விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். விளம்பரம் வெளியிடுவதற்கான  தொகையை அதிமுக கட்சியிடம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அப்போது,  திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், மக்கள் நலனுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி கடந்த 2 மாதங்களாக விளம்பரங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது. முதல்வர் வேட்பாளர் மற்றும் ஆளுங்கட்சியை முன்னிலை படுத்தும் வகையில் வெளியிடப்படும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என  தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்துள்ளதாகவ தெரிவித்தார். அப்போது தேர்தல் ஆணையம் தரப்பு மூத்த வழக்குரைஞர் ராஜகோபால், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவிடம் விளக்கம் பெற்றுள்ளதாகவும், அதை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதால், மனுவுக்கு விரிவாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார். 

அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், ரூ.1000 கோடி செலவழிக்கப்படவில்லை. ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ. 64 கோடியே 72 லட்சம் மட்டும் செலவிடப்பட்டுள்ளது. அரசின் சாதனைகளை விளக்கி வெளியிடப்படும் இந்த விளம்பரங்கள் வழங்குவது, கடந்த 18-ஆம் தேதியுடன் நிறுத்தப்பட்டு விட்டது. தேர்தல் அறிவிப்பு வெளியிட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வரவில்லை. இதுசம்பந்தமாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள்  விசாரணையை வரும் மார்ச் 2-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மனு தொடர்பாக தேர்தல் ஆணையம், தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

ADVERTISEMENT

Tags : high court
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT