தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
ஒரு பக்கம், ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வேன், அதைச் செய்வேன் என எதிர்க்கட்சி வாக்குறுதிகளை அள்ளிவிட, அதையெல்லாம் ஆட்சியில் இருக்கும் நாங்களே செய்துவிடுகிறோம் என்று ஆளுங்கட்சியோ அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. கூட்டுறவு பயிர்க் கடன் ரத்து, வழக்குகள் ரத்து என நாள்தோறும் புதிய அறிவிப்புகளை தமிழகம் கண்டு வருகிறது.
ஒரு பக்கம் அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் தீவிரம்காட்டி வரும் நிலையில், பொதுமக்கள் மட்டும் சும்மா இருந்து விட முடியுமா என்ன?
புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வது, தங்களது இருப்பிடத்துக்கு அருகே வாக்குச்சவாடி எங்கிருக்கிறது என்பதை அறிந்துவைத்துக் கொள்வதும் முக்கியமல்லவா.
தங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் வாக்குச்சாவடி பற்றிய விவரங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் அமைக்கப்படும் தேர்தல் வாக்குச்சாவடி விவரங்கள் இணையத்தில் உள்ளன.
நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், வாக்காளர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி வாக்களிக்க வசதியாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உங்கள் பகுதிக்கு அருகே இருக்கும் வாக்குச்சாவடி குறித்த விவரங்களை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
அதற்கு, https://www.elections.tn.gov.in/ என்ற இணையதளத்துக்குச் சென்று, அதில், எலக்ஷன்ஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
எலக்ஷ்ன்ஸ் பக்கத்தில் போலிங் ஸ்டேஷ்னை கிளிக் செய்து, அதில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, அதில் உங்கள் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
உங்கள் தொகுதியில் அமைக்கப்படும் அனைத்து வாக்குச்சாவடிகளின் விவரங்களும், அந்த வாக்குச்சாவடிக்கு உள்பட்ட தெருக்களின் விவரங்களும் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, புதிதாகக் குடிபெயர்ந்தவர்களும், புதிய வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டியவர்களும், இந்த முறையில் எளிதாக உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ள முடியும்.