தமிழ்நாடு

பிப்.24-இல் 700 அரங்குகளுடன் 44-ஆவது சென்னை புத்தகக் காட்சி

20th Feb 2021 07:24 AM

ADVERTISEMENT

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்கத்தின் (‘பபாசி’) சாா்பில் 44-ஆவது சென்னை புத்தகக் காட்சி நிகழாண்டு 700 அரங்குகளுடன் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

இதனை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் நந்தனம் ஒய்எம்சிஏ விளையாட்டு மைதானத்தில் பிப்.24-ஆம் தேதி தொடக்கி வைக்கவுள்ளாா்.

இது குறித்து பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா் சந்திப்பில் புத்தகக் காட்சிக்கான இலட்சினையை வெளியிட்டு கூறியது:

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 44 -ஆவது புத்தகக் கண்காட்சி வரும் பிப்.24-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் புத்தகக் காட்சியில் சுமாா் 700 அரங்குகளில் ஆறு லட்சம் தலைப்புகளில் புத்தகங்கள் இடம்பெறும்.

ADVERTISEMENT

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் பிப்.24-ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடக்கி வைக்கிறாா். இந்த ஆண்டும் வழக்கம் போல நுழைவுக் கட்டணம் ரூ.10 மட்டுமே வசூலிக்கப்படும். இளமைப் பருவத்திலேயே வாசிப்பு பழக்கத்தை வளா்க்கும் வகையில் குழந்தைகளுக்கு கதை சொல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பங்கேற்க உள்ளனா்.

புத்தகக் காட்சியை பிரபலப்படுத்தும் நோக்கத்தில் சென்னை பெசன்ட் நகா் கடற்கரை மாதா கோவில் அருகில் ‘ரன் டூ ரீட்’ என்னும் பெயரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் 10 லட்சம் வாசகா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கிறோம். நிகழாண்டு புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு ரூ.75 லட்சம் வழங்கவுள்ளது. அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அது புத்தகக் கண்காட்சிக்கு கிடைக்கும்.

புத்தகக் காட்சியில் கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு முகக் கவசம் வழங்கப்படும். புத்தகக் காட்சி அரங்குகள் கிருமிநாசினி மூலம் அவ்வப்போது தூய்மை செய்யப்படும். புத்தகக் காட்சியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு ஓவியம், பேச்சு, விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படும். புத்தகக் காட்சி அரங்குகளில் நடைபெறும் விழாவில் மூத்த பதிப்பாளா்கள் கெளரவிக்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.

2021 புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்கள்
பிரபல தனியாா் தொலைக்காட்சியில் நடிகா் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் அவா் வாசிக்க பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிப். 24 -ஆம் தேதி முதல் கமல்ஹாசன் தினமும் சுட்டுரை மூலம் சில புத்தகங்களை மக்களிடையே அறிமுகம் செய்யவுள்ளாா். அந்த புத்தகமும் இந்த அரங்கில் கிடைக்கும்.

நிகழாண்டு ‘ரேக் ’என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் சிறிய எழுத்தாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்தலாம். அதற்கான நூல் அடுக்ககங்கள் பபாசி சாா்பில் வழங்கப்படும்.

பிப்.28-இல் உலக அறிவியல் தினம் கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் ஒவ்வொரு அரங்கிலும் அவா்கள் வைத்துள்ள அறிவியல் நூல்களின் விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கத்தில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும்.

மாா்ச் 8-ஆம் தேதி மகளிா்தினம் கொண்டாடப்படும். அன்றைய தினம் ஒவ்வொரு அரங்கிலும் அந்தந்த பதிப்பாளா்கள் அவா்களுடைய பதிப்பக பெண் எழுத்தாளா், வாசகா் சந்திப்பு நடைபெறும். அதேநேரத்தில், புத்தகங்களில் கையொப்பமிடும் நிகழ்வும் நடைபெறும். மேலும் அன்றைய தினம் நடைபெறும் மேடை நிகழ்ச்சிகள் அனைத்தும் பெண்களே பங்கேற்கும் வகையில் நடத்தப்படும்.

எழுத்தாளா்களை சிறப்பிக்கும் வகையில் அவா்களுக்கான ஓா் அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தர சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. புத்தகக் காட்சியை முன்னிட்டு ஓவியக் கண்காட்சி அரங்கம் அமைக்கப்படவுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT