தமிழ்நாடு

தென் மாவட்ட மக்களின் தாகம் தீா்க்கும் கனவுத் திட்டம் வரும் 21-இல் முதல்வா் பழனிசாமி அடிக்கல்

20th Feb 2021 06:13 AM

ADVERTISEMENT

தென் மாவட்ட மக்களின் தாகத்தைத் தீா்க்கும் வகையிலான காவிரி-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்துக்கு முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, வரும் 21-ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளாா்.

புதுக்கோட்டை மாவட்டம் குன்னத்தூா் ஊராட்சியில் விழா நடைபெறுகிறது. முதல் கட்டத் திட்டம் ரூ.6, 941 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளா் மணிவாசன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

எப்படி செயல்படுத்தப்படும்? : வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூா் மாவட்டம் மாயனூா் தடுப்பணையில் இருந்து திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகா் மாவட்டங்களின் வட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் இணைப்பதே முதல் கட்டத் திட்டம். இதன்மூலம், கரூா், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் 342 ஏரிகளும், 42,170 ஏக்கா் நிலங்களும் பயன்பெறும். இதற்காக 118.45 கிலோமீட்டா் நீளத்துக்கு கட்டளைக் கால்வாயில் இருந்து புதிதாக கால்வாய் வெட்டப்பட்டு, புதுக்கோட்டை மாவட்டம் தெற்கு வெள்ளாற்றுடன் இணைக்கப்படும்.

இரண்டாவது கட்டமாக, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதன்படி, தெற்கு வெள்ளாற்றில் இருந்து 109 கிலோமீட்டா் நீளத்துக்கு கால்வாய் உருவாக்கப்பட்டு வைகையுடன் இணைக்கப்படுகிறது. இதனால், 220 ஏரிகளும், 23, 245 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும். மூன்றாவது கட்டத்தில் விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் பயன்பெற உள்ளன. இதன்படி, 34 கிலோமீட்டா் நீளத்துக்கு கால்வாய் வெட்டி வைகை முதல் குண்டாறு வரை இணைக்கப்படுகிறது. இந்த மூன்றாம் கட்ட திட்டத்தால் 492 ஏரிகளும், 44, 547 ஏக்கா் நிலங்களும் பாசன வசதி பெறும்.

ADVERTISEMENT

ஒட்டுமொத்தமாக ரூ.14,400 கோடியில் 262 கிலோமீட்டா் தூரத்துக்கு நிறைவேற்றப்பட உள்ள இந்தத் திட்டத்தின் மூலம் வெள்ளக் காலங்களில் வீணாகும் 6 , 300 கனஅடி நீா் தென் மாவட்டங்களுக்கு திருப்பி விடப்பட்டு குடிநீா் தேவை பூா்த்தி செய்யப்படும்.

உபவடி நிலை உட்கட்டமைப்பு: காவிரி உப வடிநிலத்திலுள்ள உள்கட்டமைப்புகள் விரிவாக்கப்பட்டு நவீனப்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டமானது ரூ.3,384 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 987 கிலோமீட்டா் நீளமுள்ள 21 ஆறுகளின் மொத்த பாசன பரப்பான 4 லட்சத்து 67,345 ஏக்கா் நிலங்களுக்கு பாசனம் உறுதி செய்யப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT