தமிழ்நாடு

கடலூரில் வெள்ள பாதிப்பைத் தடுக்க நிரந்திரத் திட்டம்: ஸ்டாலின்

13th Feb 2021 09:43 PM

ADVERTISEMENT

சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பைத் தடுக்க வல்லுநர்கள் ஆலோசனை பெற்று திமுக ஆட்சி வந்தவுடன் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு நிரந்திர தீர்வு காணப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய சட்டப்பேரவை  தொகுதிகளுக்கான உங்கள் தொகுதியில் ஸ்டாலின்  என்ற நிகழ்ச்சி  சிதம்பரம் புறவழிச்சாலையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில்,  திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் பங்கேற்று இத்தொகுதிகளுக்குப்பட்ட பகுதியைச் சேர்ந்த விளையாட்டு  வீரர்கள், பல்வேறு  சாதனைகள்  புரிந்தவர்களை கௌரவப்படுத்தினார்.

பின்னர் அவர் மனு அளித்தவர்களுக்கு பதில் அளித்து பேசுகையில் தெரிவித்தது: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு சரியாக நிதி ஒதுக்கப்படுவதில்லை என இங்கு தெரிவித்தனர்.

ADVERTISEMENT

திமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும். உள்ளாட்சிதுறை இன்று ஊழல் ஆட்சித்துறையாக மாறியுள்ளது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது நல்லாட்சி துறை என பாராட்டினார்கள்.

நெய்வேலியில் நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு, வேலை வழங்க வேண்டும் என கோரியுள்ளனர். மேலும் திமுக ஆட்சி அமைந்தவும் கடலூர் மாவட்ட என்எல்சி நிறுவனத்தின் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

விடிவு காலம் ஏற்படும். மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணிப்பயன் வழங்கப்படாமல் உள்ளது. திமுக ஆட்சியமைந்தவுடன் பணப் பலன் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.சி.சம்பத் தொழில்துறை அமைச்சராக உள்ளார். ஆனால் தமிழகத்தில், குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் எந்த தொழறிச்சாலையும் தொடங்கவில்லை.

எப்போ மழை பெய்தாலும் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக திகழ்கிறது கடலூர் மாவட்டம். திமுக ஆட்சி வந்தவுடன் நிரந்திர தீர்வு காணப்படும். 

திமுக ஆட்சியில் 1989-ல் திமுக ஆட்சியில் முதன் முதலில் தருமபுரியில் மகளிர் சுய உதவிக்குழுவை கருணாநிதி தொடங்கி வைத்தார். பெண்களுக்கு ஆட்சியில் இருக்கும் போது கருணாநிதி அற்புதமான திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளார்.

உதாரணமாக சொத்துக்களில் பெண்களுக்கு சம உரிமை, வேலைவாய்ப்புக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 30 சதவீத ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு உதவித்தொகை, திருமண நிதி உதவிதிட்டம். பெண்கள் தான் சொந்த காலில் நிற்க வேண்டும் என கருணாநிதி மகளிர் சுய உதவிக்குழுக்களை தொடங்கினார்.

2006-ல் 5-வது முறையாக கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்ற போது நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்றேன். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்காக தனியாக நிகழ்ச்சி நடத்தி வங்கி மானியம், சுழல் நிதி வழங்க நடவடிக்கை மேற்கொண்டேன். அதிமுக ஆட்சியில் மணல் கொள்ளை அதிகம் நடைபெற்று வருகிறது.

மணல் விலை பவுன் விலையை விட உயர்ந்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மணல் கொள்ளை தடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், துரை.கி.சரவணன் எம்எல்ஏ , திமுக நகரச் செயலாளர் கே.ஆர்.செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT