தமிழ்நாடு

'பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'

11th Feb 2021 04:11 PM

ADVERTISEMENT

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கட்டுக்குள் உள்ள நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலையினை நாளுக்கு நாள் உயர்த்துவதை வாடிக்கையாகக் கொண்டு மக்களை வதைத்து வருகிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு. அதன் விளைவாக, பெட்ரோல் விலை புதிய உச்சமாக ஒரு லிட்டர் ரூ.90-ஐ கடந்துள்ளது.

மாநில அரசுக்குச் சேர வேண்டிய வரிவருவாயை மத்திய பா.ஜ.க அரசு ஏற்கனவே பறித்துவிட்ட நிலையில், வரிகளின் வாயிலாக பெட்ரோல் - டீசல் விலையை உயர்த்தி பொதுமக்களையும் நேரடியாகத் துன்புறுத்தும் கொடுமைக்கு உடனே முற்றுப்புள்ளி வைத்திட வலியுறுத்துகிறேன்.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை விரைவில் சதமடிக்கும் என்கிற அச்சம் மக்களிடம் உள்ளது. அன்றாடத் தேவையாகிவிட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்வு வணிகம் சார்ந்த அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்போது விலைவாசி கடுமையாக ஏறும். அதுவும் மக்கள் மீதே சுமையாகும்.

ADVERTISEMENT

கரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் எனும் நெருப்பு இன்னும் முழுமையாக அணையாத நிலையில், அதன் மீது விலையேற்றம் என்ற பெயரில் பெட்ரோல் ஊற்ற வேண்டாம். மக்களின் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. அதனால் உடனடியாக பெட்ரோல் - டீசல் மீதான வரிகளைக் குறைத்து விலைக் குறைப்புக்கு வழி வகுத்திடுக என மத்திய அரசை வலியுறுத்துகிறேன். மாநில அரசுக்கும் இது பொருந்தும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Tags : DMK
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT