தமிழ்நாடு

சசிகலா சொத்துகள் முடக்கத்துக்கும் அரசுக்கும் தொடர்பில்லை: முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி

11th Feb 2021 05:02 AM

ADVERTISEMENT


ஓமலூர்: சசிகலா சொத்துகள் முடக்கத்துக்கும் தமிழக அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை  என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: அமமுகவால் அதிமுகவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. சசிகலா உள்ளிட்டவர்களின் சொத்துகள் முடக்கப்படுவதற்கும், தமிழக அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. உச்சநீதிமன்ற உத்தரவை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அமல்படுத்தி வருகின்றனர். தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் சசிகலாவுக்கு ஆதரவுத் தெரிவித்து பேசுவது குறித்து நாங்கள் கருத்துக் கூற முடியாது. 
பாமகவுடன் கூட்டணி-இழுபறி இல்லை: பாமகவுடனான கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. எல்லா கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தித்தான் தொகுதிகளைப் பங்கீடு செய்வார்கள். ன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீடு குறித்து பகிரங்கமாக உடனே சொல்லிட முடியாது. எந்தச் சூழ்நிலையில் எதைச் செய்ய வேண்டுமோ அதை அரசு நிச்சயமாகச் செய்யும்.
உற்சாகமான வரவேற்பு: அதிமுக சார்பில் பிரசாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நான் சென்ற இடமெல்லாம் மிகச் சிறப்பாக எழுச்சியுடன் மக்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடருவோம்.
அதிமுக வேறு, அமமுக வேறு: அமமுக தேவையில்லாமல் எங்கள் கட்சியில் மூக்கை நுழைக்கப் பார்க்கிறது. அந்தக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர விருப்பம் தெரிவித்தால் கட்சித் தலைமை முடிவு செய்யும். அதிமுகவில் இல்லாத காரணத்தால்தான் சசிகலா குறித்து பிரசாரத்தில் நான் எதுவும் பேசுவதில்லை. ஆனால் டிடிவி தினகரன், எங்கள் கட்சியைச் சேர்ந்த 18 எம்.எம்.ஏ.க்களை பிரித்துக் கொண்டு போய் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டார்.  அதனால்தான் அவரைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறோம். திமுகவை அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர். தீய சக்தி என்று கூறியுள்ளார். அதனைப் பின்பற்றித்தான் நாங்கள் தொடர்ந்து திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று வருகிறோம். 
தெரியாமல் கூறுகிறார் ஸ்டாலின்: ஆட்சி அமைந்தால் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைப்பேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின்  கூறியிருக்கிறார்.  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஏற்கெனவே, எம்.பி.க்கள்,  எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில முதல்வர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு விட்டது. இதுகூடத் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். 
திமுக 13 ஆண்டுகாலம் மத்திய ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டிருந்தபோது எந்தத் திட்டத்தையும் தமிழகத்துக்கு கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக மத்திய ஆட்சியில் பங்குகொள்ளாமலேயே ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள்,  மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளோம். மெட்ரோ திட்டத்தின் 2-ஆம் கட்ட திட்டத்துக்கு  அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இன்னும் பல திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று வருகிறோம் என்றார். 
பேட்டியின் போது, தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத் தலைவர் சி.பொன்னையன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.செம்மலை, எஸ்.வெற்றிவேல், அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT