கம்பம்: தேனி மாவட்டம் சுருளி அருகில் தை அமாவாசை தினத்தை முன்னிட்டு முன்னோர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய பக்தர்கள் குவிந்தனர்.
தேனி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுருளி அருவி சுற்றுலாத் தலமாகவும் ஆன்மிகத் தலமாகவும் உள்ளது.
ஆண்டுதோறும் ஆடி மற்றும் தை அமாவாசை நாள்களில் சுருளி அருவியில் பக்தர்கள் குளித்துவிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் வழிபாடுகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
வியாழக்கிழமை அமாவாசை தினத்தை முன்னிட்டு சுருளி அருவிக்கு அதிகாலை முதலே ஆண், பெண் பக்தர்கள் திரண்டு வந்தனர்.
கரோனா தொற்று பரவல் காரணமாக அருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், பக்தர்கள் சுருளி அருவி வளாகம் மற்றும் சுருளி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் புரோகிதர்கள் மூலம் இறந்த முன்னோர்களை நினைத்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். குளிக்கத் தடை செய்யப்பட்ட தால் ஏமாற்றமடைந்தனர். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு அன்னதானம் பல இடங்களில் வழங்கப்பட்டது.
ராயப்பன்பட்டி காவல் நிலைய போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். கம்பம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.