தமிழ்நாடு

தை அமாவாசை: பவானி கூடுதுறையில் திரளான பக்தர்கள் புனித நீராடி வழிபாடு

11th Feb 2021 03:04 PM

ADVERTISEMENT

பவானி: தை அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற பரிகாரத் தலமான பவானி கூடுதுறையில்  திரளான பக்தர்கள் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். 

தமிழ் மாதத்தில் புரட்டாசி, ஆடி மற்றும் தை மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் நதிக்கரையோரங்களில் மூத்தோர் வழிபாடு, தோஷ நிவர்த்தி வழிபாடுகள் செய்தால் தீமைகள் விலகி நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. இந்நாளில் பவானி, காவிரி மற்றும் அமுத நதிகள் சங்கமிக்கும் கூடுதுறையில் பரிகார வழிபாடு, மூத்தோர் வழிபாட்டுக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.

தை அமாவாசை தினமான வியாழக்கிழமை அதிகாலை முதலே பக்தர்கள் மூத்தோர் வழிபாட்டுக்கு திரண்டு வந்தனர். பரிகார மண்டபங்களில்  மூதாதையருக்கு எள், தண்ணீர் வைத்து வழிபட்ட பக்தர்கள் காவிரியில் கரைத்து, புனித நீராடினர். தொடர்ந்து சங்கமேஸ்வரர் கோயில் வேதநாயகி மற்றும் ஆதிகேசவ பெருமாள் வழிபட்டுச் சென்றனர்.

ADVERTISEMENT

திரளான பக்தர்கள் வந்ததால் பரிகார மண்டபங்கள் நிறைந்து காவிரிக்கரை மற்றும் திறந்த வெளிகளில் மூத்தோர் வழிபாடு நடத்தப்பட்டது. திருமணத் தடை, செவ்வாய் தோஷம், நாக தோஷம் உள்ளிட்ட பல்வேறு தோஷ நிவர்த்தி பரிகார வழிபாடுகளும் நடத்தப்பட்டன. பவானி காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 30-க்கும் மேற்பட்ட ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.

காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாகச் செல்வதால் பக்தர்கள் ஆழமான பகுதிக்கு நீராடச் செல்வதைத் தடுக்க தீயணைப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஆடி, புரட்டாசி மகாளய அமாவாசை தினங்களில் பரிகார வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டதால், தை அமாவாசை தினத்தில் மூத்தோர் வழிபாட்டுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால் நிம்மதி அடைந்தனர்.
 

Tags : ஈரோடு
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT