தமிழ்நாடு

குடும்ப ஆட்சிக்கு அதிமுக தலைவணங்காது: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

11th Feb 2021 05:10 AM

ADVERTISEMENT

 

கிருஷ்ணகிரி: ஒரு குடும்பம் ஆள்வதற்காக அதிமுக எப்போதும் தலைவணங்காது என கிருஷ்ணகிரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, கிருஷ்ணகிரி வழியாக சாலை மார்க்கமாக புதன்கிழமை சேலம் சென்றார். கிருஷ்ணகிரி ஆவின் மேம்பாலம் அருகே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.பி., கிழக்கு மாவட்டச் செயலாளர் அசோக்குமார் தலைமையில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது முதல்வர் பழனிசாமி பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக சந்திக்கும் முதல் தேர்தலான வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், தில்லுமுல்லு செய்து, வெற்றி பெற திமுகவினர் திட்டமிட்டு, சதி செய்து, அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர். திமுக வாரிசு அரசியலை முன்வைத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது. கருணாநிதிக்குப் பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி என வாரிசு அரசியலை உருவாக்கி உள்ளனர். இந்தத் தேர்தலுடன் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினார். சொல்வதைச் செயல்படுத்தும் அரசாக அதிமுக அரசு உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே அதிமுக அரசு மீது அவதூறான பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார். 

ADVERTISEMENT

ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர். அதிமுகவை உருவாக்கினார்.  எம்ஜிஆர்., ஜெயலலிதாவின் ஆசியோடு அதிமுக வீரநடையிட்டுக் கொண்டு இருக்கிறது. சிலர் திட்டமிட்டு, சதி செய்து அதிமுகவைக் கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். ஒவ்வொரு தொண்டரும் எச்சரிக்கையோடு இருந்து அதிமுகவைக் காக்க வேண்டும்.  

கடந்த 2016-ஆம் ஆண்டு நான் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, 18 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிரிந்து, இந்த ஆட்சியைக் கலைக்கவும், கட்சியை உடைக்கவும் முயற்சி மேற்கொண்டனர். அப்போது நாம் ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தோம். டிடிவி தினகரன் கடந்த 4 ஆண்டுகளாக அலைந்து பார்த்தார். 10 ஆண்டுகளாக அவர் அதிமுகவில் இல்லை. ஜெயலலிதா இருந்தபோதே அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது சதிவலை பின்னிக் கொண்டு இருக்கிறார். இதனை ஒரு போதும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது.

அதிமுக உழைப்பால் உயர்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு, இந்தக் கட்சி எப்போதும் தலைவணங்காது. அதிமுகவைச் சேர்ந்த தொண்டன்தான் இந்தக் கட்சிக்கு முதல்வராக முடியும். உழைப்பு, விசுவாசம் இருந்தால் யார் வேண்டும் என்றாலும் முதல்வராக முடியும். 

டிடிவி தினகரன் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுகவை உடைக்க முடியாது. மீண்டும் ஜெயலலிதாவின் அரசு அமைப்போம். இதற்காக ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சபதம் ஏற்கவேண்டும். அதிமுக ஆட்சி தொடரப் பாடுபட்டு, அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்  என்றார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT