சென்னை: நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாட்டில் இதுவரை சுமார் 70 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சென்னையில் நாள்தோறும் 5,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பானது என்ற விழிப்புணர்வை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்படுத்தி வருகின்றன.
கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள பதிவு செய்தல் அவசியம்.
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளச் செல்லும் போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்துச் செல்ல வேண்டும், உங்கள் முன்பதிவு மற்றும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க இது உதவும்.
தடுப்பூசி போட்ட பிறகு 30 நிமிடங்கள் அங்கேயே மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும்.
முறையான பாதுகாப்புப் பெற இரண்டாவது தவணை தடுப்பூசி குறித்த தேதியில் போட்டுக் கொள்ளுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரோனா தடுப்பூசி போட்ட பிறகும் முழுமையான பாதுகாப்பு பெற இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றுங்கள் என்று தமிழக சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, தடுப்பூசி போட்ட பிறகும் முழுமையான பாதுகாப்பு பெற இந்த ஐந்து வழிகளைப் பின்பற்றுங்கள். முகக்கவசத்தை முறையாக அணிய வேண்டும், சோப்புப் போட்டு கைகளைக் கழுவுங்கள், தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுங்கள், கரோன அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள், அறிகுறிகள் அதிகமானால் மருத்துவரை நாடுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.