அம்மாபேட்டை அருகே வனப்பகுதியிலிருந்து தண்ணீர் தேடி வெளியேறிய புள்ளிமான், நாய்கள் துரத்தியதால் வீட்டுக்குள் தஞ்சம் புகுந்தது. இதனை வனத்துறையினர் மீட்டுப் பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவித்தனர்.
ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ளது பாலமலை. இம்மலைப் பகுதியில் அரியவகை மரங்கள் உள்ளன. மேலும், மான்கள், முயல், குரங்குகள், கரடி, போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது கடுமையான வெயில் அடித்து வருவதால் வனப்பகுதியில் குட்டைகள் காய்ந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பாலமலை வனப்பகுதியிலிருந்து, வியாழக்கிழமை அதிகாலை தண்ணீர் தேடி, வனத்தை விட்டு வெளியேறிய புள்ளிமான் வயல்வெளிகளில் சுற்றித் திரிந்துள்ளது. இதைக்கண்ட நாய்கள் மானைத் துரத்தியுள்ளது. நாய்கள் துரத்தியதால் பயந்துபோன புள்ளிமான், வனப்பகுதியை ஒட்டியுள்ள பிகே. புதூர் கிராமத்தில் திறந்திருந்த நாராயணன் வீட்டுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தது.
வீட்டுக்குள் மான் புகுந்ததைக் கண்ட நாராயணன், வீட்டின் கதவைப் பூட்டி மானுக்கு அடைக்கலம் தந்ததோடு தண்ணீர் கொடுத்துள்ளார். இதுகுறித்து சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னம்பட்டி வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள், முத்துசாமி, சுரேஷ், தசரதன், கார்த்திக், ஆகியோர்கள் விரைந்து சென்று வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த புலி மானைப் பத்திரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட பெண் புள்ளிமானுக்கு சுமார் மூன்று வயதிருக்கலாம். புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, சென்னம்பட்டி வனப்பகுதியில் நீர்நிலைகள் அதிகம் உள்ள பகுதியில் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது. தண்ணீர் தேடி வீட்டுக்குள் தஞ்சம் புகுந்த புள்ளிமானை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.