தமிழ்நாடு

"விரைவு ரயில்களில் 3 மாதங்களுக்குப் பிறகே முன்பதிவில்லாத பெட்டிகள்'

11th Feb 2021 04:19 AM

ADVERTISEMENT


விழுப்புரம்: விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் தற்போது இணைக்கப்படாது; இன்னும் 3 மாதங்களுக்குப் பிறகே இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் கூறினார்.

அவர்  புதன்கிழமை காட்பாடி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் பாதைகள் மற்றும் ரயில் நிலையங்களை சிறப்பு ரயிலில் சென்று ஆய்வு செய்தார். மாலை 6 மணியளவில் விழுப்புரத்துக்கு வந்த ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸ், ரயில் நிலையத்தில் கேங்க் மேன்களுக்கான ஓய்வு அறை, கணினி கட்டுப்பாட்டு அறை, கண்காணிப்பு கேமரா அறை போன்றவற்றின் பயன்பாட்டை தொடக்கி வைத்தார். மேலும், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை செலுத்தி அழிக்கும் இயந்திரத்தையும் தொடக்கி வைத்தார்.

தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காட்பாடி முதல் விழுப்புரம் வரையிலான ரயில் நிலையங்களில் பயணிகள், ரயில்வே ஊழியர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ரயில் பாதையும் தரமாக உள்ளது.

கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன. நிறுத்தப்பட்ட விரைவு ரயில்களில் 72 சதவீத ரயில்கள் தற்போது இயக்கப்படுகின்றன. இருப்பினும், பயணிகள் ரயில்கள் (பாசஞ்சர் ரயில்) முழுமையாக இயக்கப்பட தற்போது வாய்ப்பில்லை. படிப்படியாக அந்த ரயில்கள் இயக்கப்படும்.

ADVERTISEMENT

விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள்( பதிவு செய்யாத பயணச்சீட்டு கொண்டு பயணம் செய்யும் வசதி) இணைக்கப்படவில்லை. கரோனா பரவல் காரணமாக, அடுத்த 3 மாதங்களுக்கு இதே நிலைதான் நீடிக்கும். விழுப்புரம்-புதுச்சேரி இடையே நிறுத்தி வைக்கப்பட்ட பயணிகள் (பாசஞ்சர்) ரயில் சேவை தற்போது தொடங்கப்படாது. விழுப்புரம்-புதுச்சேரி இடையே இரட்டை ரயில்பாதை அமைக்கும் திட்டம் தற்போது இல்லை. 

விழுப்புரம்-தஞ்சாவூர், திருவாரூர்-காரைக்கால் ஆகிய ரயில் பாதைகளை மின்மயமாக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளன. நாகப்பட்டினம் மின்மயமாக்கும் பணி  விரைவில் நிறைவடையும் என்றார் அவர். திருச்சி கோட்ட மேலாளர் அஜய்குமார், மூத்த கோட்டப் பொறியாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT