தமிழ்நாடு

இளவரசி, சுதாகரன் சொத்துகள் பறிமுதல்: 3 இடங்களில் நடவடிக்கை

10th Feb 2021 03:13 AM |  சாத்தான்குளம்/ஸ்ரீவைகுண்டம்/தஞ்சாவூர்,

ADVERTISEMENT

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
 சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம்- 1 கிராமத்தில் சசிகலா உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குச் சொந்தமான சுமார் 350 ஏக்கர் நிலத்தை வருவாய்த் துறையினர் ஆய்வு செய்து ஏற்கெனவே கையகப்படுத்தியுள்ளனர்.
 இந்நிலங்களை அரசுடைமை ஆக்குவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.
 ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குட்பட்ட கால்வாய், சேரகுளம், வல்லகுளம் கிராமங்களில் இளவரசி, சுதாகரன் ஆகியோரின் 800 ஏக்கர் நிலத்தைப் பறிமுதல் செய்வது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
 சாத்தான்குளம் வட்டாட்சியர் லட்சுமிகணேஷ், துணை வட்டாட்சியர் சுல்தான் சலாவூதின் உள்ளிட்டோர், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன், மண்டல துணை வட்டாட்சியர் சங்கரநாராயணன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் இருதய மேரி உள்ளிட்ட வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
 தஞ்சாவூரில்... தஞ்சாவூரிலும் இளவரசி, சுதாகரனுக்கு, திருச்சி சாலை அருகேயுள்ள வ.உ.சி. நகரில் 26,540 சதுரஅடி பரப்பளவு கொண்ட 3 காலி மனைகளைப் பறிமுதல் செய்துள்ளதாக ஆட்சியர் ம.கோவிந்த ராவ் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, தஞ்சாவூர் வ.உ.சி. நகரில் வி.என். சுதாகரன், ஜெ. இளவரசி பெயரிலுள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்து, தமிழ்நாடு அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 இதனால், இச்சொத்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துகள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இச்சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது எனத் தெரிவித்துள்ளார். கடந்த 1995 -ஆம் ஆண்டில் இருவரும் இந்த மனைகளை வாங்கியுள்ளனர். தற்போது, இச்சொத்துகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 10 கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT