தமிழ்நாடு

இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது!

8th Feb 2021 04:14 PM

ADVERTISEMENT

 

சென்னை: இடஒதுக்கீடு கொள்கையை மறுப்பது, எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானது என்று மத்திய பா.ஜ.க. அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செயல்பட்டு வரும் மத்திய பா.ஜ.க. அரசு, மண்டல் கமிஷன் தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின்  ஒரே ஒரு துறையில் கூட முழுமையாகச் செயல்படுத்தவில்லை.  பட்டியலின - பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து - மத்திய அரசின் துறைகளில்,  இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும், பட்டியலின - பழங்குடியினத்தவருக்கு இடமில்லை என்ற எழுதப்படாத உத்தரவினை வேகமாகச் செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும்.

ADVERTISEMENT

இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட - பட்டியலின - பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று  இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாகவே - தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆட்களை – அதுவும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து- எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

மத்திய அரசின் துறைகளையும் தனியார் மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது. அதுமட்டுமின்றி - மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின - பழங்குடியின அலுவலர்கள் - அதிகாரிகள் ஆகியோருக்கு உயர் பதவிகளை எட்டாக் கனியாக்கி - அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் - கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும்  ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்!

எனவே இந்த முடிவை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்றும் - அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின - பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும்,  எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானதாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT