திருப்பத்தூர்: உங்கள் அன்புக்கு நான் அடிமை என்று எம்ஜிஆரின் திரைப்படப் பாடலை மேற்கோள்காட்டி தனது உரையைத் தொடங்கிய சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
பெங்களூரிலிருந்து வாணியம்பாடி வழியாக சென்னை வரும் வழியில் நெக்குந்தி அருகே அமமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் சசிகலாவுக்கு வரவேற்பு அளித்தனர்.
அப்போது சசிகலா பேசியதாவது, தொண்டர்களின் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. உங்கள் அன்புக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை என்று உரையைத் தொடங்கினார்.
மேலும் அடக்குமுறைக்கு தான் ஒருபோதும் அடிபணிய மாட்டேன். தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன். விரைவில் உங்கள் எல்லோரையும் சந்திப்பேன் என்றும் கூறினார்.
ஜெயலலிதாவின் நினைவிடம் அவசரமாக மூடப்பட்டிருப்பது ஏன் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக கொடியை நான் பயன்படுத்தியது குறித்து புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தையே காட்டுகிறது. விரைவில் செய்தியாளர்களை சந்திப்பேன். அப்போது விரிவாகப் பேசலாம் என்றும் சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்துவிட்டு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகம் திரும்பியிருக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு, அமமுகவினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தன்னைக் காண திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசினார்.
அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்துக்குச் செல்வீர்களா என்ற கேள்விக்கு பொருத்திருந்து பாருங்கள் என்று பதிலளித்தார்.