தமிழ்நாடு

விசைத்தறியாளர்கள் வங்கிக் கடனை ரத்து செய்க: உழவர் உழைப்பாளர் கட்சி

6th Feb 2021 03:54 PM

ADVERTISEMENT

பல்லடம்: விவசாயம் சார்ந்த தொழிலான கோழிப்பண்ணையாளர்கள், விசைத்தறியாளர்களின் வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் நாராயணசாமி நாயுடுவின் 97 வது பிறந்த நாள் விழா உழவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு அக்கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து.தலைமை வகித்தார். மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் திருப்பூர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்பூர் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார். இக்கூட்டத்தில் கோவை மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, காடாம்பாடி ஈஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளி்ல் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனை தள்ளுபடி செய்து அறிவித்த தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்வது. அதே போல் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய விவசாயம் சார்ந்த கடன்களை தள்ளுபடி செய்திட வேண்டும்.

விவசாயம் சார்ந்த தொழில்களான கோழிப்பண்ணை, விசைத்தறி துணி உற்பத்தியாளர்களின் வங்கி மற்றும் கூட்டுறவு கடன்களையும் ரத்து செய்திட வேண்டும். நொய்யல் - உப்பாறு நதி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அமராவதி ஆற்றில் இருந்து உப்பாறு அணை மற்றும் வட்டமலை ஒடைகரை அணைக்கு தண்ணீர் உபரிநீரை உடனடியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேங்காய் கொப்பரை கிலோ ரூ.150, மஞ்சள் குவிண்டால் ரூ.20ஆயிரம், மக்காசோளம் குவிண்டால் ரூ.25000, கரும்பு டன்னுக்கு ரூ.4ஆயிரம், நெல் குவிண்டால் ரூ.3ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

பசும்பால் லிட்டருக்கு ரூ.50, எருமை பால் லிட்டருக்கு ரூ.80 என்று விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அமராவதி கூட்டுறவு ஆலைக்கு 2019 - 20 ம் ஆண்டு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 50 லட்சம் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர சட்டப்படி கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT