காடையாம்பட்டி தாலுகா வேகொங்கரப்பட்டியில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கை ஓமலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் ரிப்பன் வெட்டி சிகிச்சையைத் தொடங்கி வைத்தார்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தாலுகா பகுதியானது பெரும்பாலான குக்கிராமங்கள் சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டி உள்ளது. ஆகையால் இந்த கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து இவர்கள் பயனடையும் வகையில் வேகொங்கரப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் அமைக்கப்பட்ட மினி கிளினிக்கை திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து இன்று (பிப்.6) கொங்கரப்பட்டியில் மினி கிளினிக் திறக்கப்பட்டது. இதனால் மங்கானிக்காடு, வீரியன்தண்டா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட குக்கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் பயனடைவார்கள்.
மேலும் இந்த மினி கிளினிக்கில் சுமார் 10ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தொடர்ந்து அம்மா தாய் சேய் நலப்பெட்டகம் மற்றும் அம்மா குழந்தை நலப் பரிசு பெட்டகத்தை சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பல்பாக்கி கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங், ஒன்றிய குழு தலைவர் மாரியம்மாள் ரவி, மாவட்ட இணைச் செயலாளர் ஈஸ்வரி பாண்டுரங்கன், ராமசந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியம், சேரன் செங்குட்டுவன், நகர செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.