தமிழ்நாடு

மயிலாடுதுறை: ஒடுக்குமுறைகளைக் கண்டித்து விவசாயிகள் மறியல்

6th Feb 2021 03:33 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை:  தில்லியில் அமைதியான முறையில் போராடும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறைகளை நடத்திய மத்திய அரசைக் கண்டித்தும், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக்கோரியும் மயிலாடுதுறையில் விவசாயிகள் பேரணியாக வந்து கிட்டப்பா அங்காடி முன்பு சனிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு மற்றும் காவேரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு, போராட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.துரைராஜ் தலைமை வகித்தார்.

காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத் தலைவர் குரு.கோபி கணேசன், பொதுச் செயலாளர் ஆர்.அன்பழகன், இயற்கை விவசாயி ஏ.ராமலிங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் டி.சிம்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மறியல் போராட்டத்தில் தில்லியில் போராடும் விவசாயிகள் மீது ஒடுக்குமுறைகளை ஏவும் மத்திய அரசை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தியும், விடுபட்டுள்ள நெல்லுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும், அரசு அறிவித்துள்ள இரண்டாம் கட்ட நெல் நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட உமா நெல் ரகத்தை கொள்முதல் செய்ய வேண்டும், குறுவைக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும், சாகுபடி செய்து பாதிக்கப்பட்ட கரும்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கைகளில் கரும்புகளை ஏந்தியும், மயிலாடுதுறையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படாத 'உமா' ரக நெல்லை சுமந்து வந்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் கே.அண்ணாதுரை பேச்சுவார்த்தை  நடத்தியதைத்  தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் பேருந்து நிலையம் பகுதியில் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT