தமிழ்நாடு

காவல்துறையினருக்கான மருத்துவமனைகளை தரம் உயர்த்த முதல்வர் உத்தரவு

6th Feb 2021 03:10 PM

ADVERTISEMENT

 

கோவை, மதுரை, திருச்சி மற்றும் ஆவடியில் இயங்கி வரும் காவல்துறையினருக்கான மருத்துவமனைகளை முழு நேர காவல் மருத்துவமனைகளாக மாற்ற தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழ்நாடு காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் உடல்நலனை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு முன்னோடியாக தொடர்ந்து விளங்கி வருகிறது.

காவலர் நலனில் பெரிதும் அக்கறை கொண்டுள்ள அரசு, காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்குகான உயரிய மருத்துவ தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு அனைத்து வகையான உயரிய சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை அளித்திட ஏதுவாக, சென்னையில் உள்ள காவல் மருத்துவமனையை, அனைத்து பிரதான மருத்துவ துறைகளையும் உள்ளடக்கிய முழுத்திறன் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நேற்று என்னுடைய பதிலுரையில் அறிவித்தேன்.

ADVERTISEMENT

தற்போது, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி மற்றும் ஆவடி மாநகரங்களில் காவல்துறையினருக்காக மருத்துவமனைகள், உள்நோயாளிகளுக்கான வசதியுடன் செயல்பட்டு வருகின்றன. இது தவிர, சென்னை புனித தோமையர் மலை, சேலம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் புறநோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகளுடன் காவல்துறையினருக்கான பகல் நேர மருத்தகங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேற்கூறிய மருத்துவமனைகள் மற்றும் மருத்தகங்களை, 36 படுக்கை வசதிகள், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி.ஸ்கேன் போன்ற நவீன உபகரணங்களுடனும், முழுமையான மருத்துவ ஆய்வகங்களுடனும், சிறிய சிகிச்சைகளுக்கான அறுவை அரங்குகளுடனும் 24 மணி நேரமும் செயல்படக் கூடிய முழு நேர காவல் மருத்துவமனைகளாக தரம் உயர்த்த நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT