தமிழ்நாடு

வேளாண் சட்டம்: பெரம்பலூரில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

6th Feb 2021 02:38 PM

ADVERTISEMENT

பெரம்பலூர்: பெரம்பலூர் புறநகர் பேருந்து நிலைய வளாகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கத்தினர் சனிக்கிழமை நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாநிலச் செயலர் ஆர்.ராஜா சிதம்பரம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பி. மாணிக்கம், மாவட்டச் செயலர் வி. நீலகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மின் வாரியத்தை தனியார் மயமாக்கக் கூடாது. விவசாயிகளுக்கு இலவச மின்சார சலுகை தொடர வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெல், மக்காச்சோளம், பருத்தி, சின்ன வெங்காயம், மரவள்ளி உள்ளிட்ட பயிர்களுக்கு முழு நிவாரணம் வழங்கிட வேண்டும்.

வறட்சி, தொடர் மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயர்துடைக்க, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய பயிர்க் கடனை தள்ளுபடி செய்தது போல, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கைதட்டி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ADVERTISEMENT

முன்னதாக, உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 97-வது பிறந்த நாளையொட்டி, அப்பகுதியில் உள்ள அவரது சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT