வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி பேரூராட்சி பேருந்து நிலையம், ரூ.8.70 கோடி செலவில், ஈரடுக்கில் அனைத்து வசதிகளுடன் நவீனமாகிறது.
காணொலி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார். வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாநில அளவில் போக்குவரத்து முக்கியத்தும் வாய்ந்த சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி பேரூராட்சி அமைந்துள்ளது. 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வரும் வாழப்பாடி பேரூராட்சி, வருவாய் வட்ட தலைமையிடமாக விளங்கி வருகிறது.
வாழப்பாடியில் வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம், காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்வாரிய கோட்ட அலுவலகங்கள் அமைந்துள்ளன.
நகர்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வணிக மற்றும் வர்த்த நிறுவனங்களும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வங்கிகள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளும் அமைந்துள்ளன.
இதனால், சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி, கல்வராயன்மலை, நெய்யமலை, சந்துமலை, அருநுாற்றுமலை, பெலாப்பாடி மலை, ஜம்பூத்துமலை கிராமங்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட கிராம மக்களின் போக்குவரத்து, கல்வி, மருத்துவம் மற்றும் வேலைவாய்ப்புக்கும் வாழப்பாடி முக்கிய மையமாக விளங்கி வருகிறது.
வாழப்பாடியின் இதயப்பகுதியான கடலுார் சாலையில் கடைவீதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு தினந்தோறும் 300க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றன.
மிகக்குறுகலான பேருந்து நிலையத்திற்குள், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், மினி பேருந்துகளை நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கே இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
பெரும்பாலான புறநகரப் பேருந்துகள் சாலை ஓரத்திலேயே நினறு பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால், பயணிகளும், வாகன ஓட்டுநர்களும் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே, வாழப்பாடி பேருந்து நிலையத்தை அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பேருந்து நிலையமாக தரம் உயர்த்த வேண்டுமென இப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
குறிப்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவரான தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலர், தற்போதைய அரசு ஆலோசகர் க.சண்முகம் ஆகியோரிடம், பல்வேறு தரப்பினர் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, வாழப்பாடி பேருந்து நிலையத்திலுள்ள பழைய கட்டடங்களை அப்புறப்படுத்திவிட்டு, ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8.70 கோடி செலவில் நிழற்குடை, பேருந்து தளம், குடிநீர், கழிவறை, மின்விளக்கு வசதிகள் மட்டுமின்றி, தமிழகத்தில் முதன்முறையாக மேல் தளத்தில் வணிக வளாகம் மற்றும் சிறு வியாபாரக் கடைகளும், நடைமேடையுடன் நவீன முறையில் அமைக்க திட்டமிட்டு, திட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.
சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டு கட்டுமானப் பணியை தொடங்கி வைத்தார்.
வாழப்பாடி பேருந்து நிலையத்தில், வாழப்பாடி செயல் அலுவலர் (பொறுப்பு) கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சண்முகம், உதவி பொறியாளர் தினேஷ்குமார், துப்புரவு ஆய்வாளர் மணிகண்டன், மாவட்ட வேளாண் விற்பனை கூட்டுறவு வங்கி துணை தலைவர் குபாய் என்கிற குபேந்திரன், வாழப்பாடி கூட்டுறவு வங்கி தலைவர் சிவக்குமார், மக்கள் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விரைவில் வாழப்பாடி பேருந்து நிலையம் புதுப்பொலிவு பெரும் என்பதால், வாழப்பாடி பகுதி பொதுமக்களும், பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.