தமிழ்நாடு

சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: பொதுப்பணித் துறை

4th Feb 2021 01:01 PM

ADVERTISEMENT

சென்னையின் குடிநீருக்காக ஆந்திரத்திலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதி நீர் மூலமாக இதுவரை 7 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது. இதனால் சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சென்னையின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க கடந்த 1983-ஆம் ஆண்டு தமிழக-ஆந்திர அரசுகளிடையே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. தற்போது வரை 7 டிஎம்சி தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT

புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.33 டிஎம்சி தண்ணீரில், 4 ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. தற்போது கிடைத்துள்ள 7 டிஎம்சி தண்ணீரால், சென்னைக்கு இந்த ஆண்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போதைய நிலவரப்படி கண்டலேறு அணையில் இருந்து 1,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தமிழக எல்லையான ஜீரோ பாயிண்டுக்கு விநாடிக்கு 430 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT