பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே மனநிலை பாதிக்கப்பட்ட தாய், இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததில் தாயும், ஒரு குழந்தையும் இறந்தனர். மற்றொரு குழந்தை ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
பேராவூரணி அருகே உள்ள கட்டயங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மதிவாணன்(45). இவரது மனைவி புவனா(40). இவர்களுக்கு அக்ஷயா(13), ஹேமாஸ்ரீ(10) என இரண்டு பெண் குழந்தைகள், கட்டயங்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளாக புவனாவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மதிவாணன் கோவையில் பார்த்துவந்த தனியார் நிறுவன வேலையை விட்டுவிட்டு வீட்டிலிருந்து மனைவி, குழந்தைகளை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் கட்டயங்காடு கிராமத்தில் புதிதாக துவங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மதிவாணன் வேலைக்கு சென்றுவிட்டார்.
வீட்டிலிருந்த புவனா தென்னை மரத்து வண்டுகளை அழிக்க பண்படுத்தும் செல்பாஸ் மாத்திரைகளை வாங்கிவந்து தண்ணீரில் கரைத்து வயிற்றில் உள்ள பூச்சிகள் சாகும் எனக்கூறி அவரும் குடித்துவிட்டு, இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். இரவு மதிவாணன் வந்து பார்த்தபோது மூவரும் வாந்தி எடுத்த நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக மூவரையும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் புவனாவும், அக்ஷயாவும், இறந்தனர்.
ஹேமாஸ்ரீ ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து திருச்சிற்றம்பலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர். தாயும், குழந்தையும் இறந்த சம்பவம் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.