நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிடங்கில் வைக்கப்பட்டிருந்த ரூ. 7 கோடி மதிப்பிலான மஞ்சள் மூட்டைகள் வியாழக்கிழமை அதிகாலை எரிந்து நாசமாயின.
ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே அதிமுகவை சேர்ந்த நாமக்கல் முன்னாள் மக்களவை உறுப்பினர் பி. ஆர். சுந்தரம் என்பவருக்கு சொந்தமான மூட்டைகள் இருப்பு வைக்கும் கிடங்கு உள்ளது.
இந்த கிடங்கில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மஞ்சள் மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை கிடங்கில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை அடுத்து அப்பகுதியினர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் .
இந்த கிடங்கில் தீ மளமளவென எரிந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர ராசிபுரம் தீயணைப்புத் துறையினர் மட்டுமின்றி சேலம், நாமக்கல், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதியில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் நகராட்சியின் குடிநீர் வாகனங்களும் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த கிடங்கில் சுமார் 15,000 விரலி ரகம் மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ. 7 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.