திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஊர்க்காவல் படையினருக்கான பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல்படைக்கு 57 ஆண்கள், 9 பெண்கள் என மொத்தம் 66 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 மாதமாக பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.
இப்பயிற்சி நிறைவு விழா பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம். டாமோர் பங்கேற்று அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதில் காவல் துணை ஆணையர்(சட்டம்-ஒழுங்கு) சரவணன், உதவி ஆணையாளர் முத்தரசு, ஆய்வாளர் பேச்சிமுத்து, ஊர்காவல்படை வட்டார தளபதி சின்னராஜா, துணை வட்டார தளபதி கனகமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.