தமிழ்நாடு

மழை, வெள்ள பாதிப்பு: புதுக்கோட்டையில் மத்தியக்குழு ஆய்வு

4th Feb 2021 09:20 AM

ADVERTISEMENT

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்தியக்குழு இன்று தொடங்கியுள்ளது. 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் நேற்று தமிழகம் வந்த நிலையில் இன்றும் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்கின்றனர்.

விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளில் ஒரு குழுவினரும் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் மற்றொரு குழுவினரும் இன்று ஆய்வைத் தொடங்கவுள்ளனர். 

ADVERTISEMENT

அதன்படி,  வியாழக்கிழமை காலை புதுக்கோட்டை மாவட்டம் களமாவூர் சீத்தப்பட்டி, மேலூர் மற்றும் ஆதனக்கோட்டை ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை மத்திய அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 

சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மண்டல மேலாளர் ரணஞ்செ சிங், மத்திய மின்சார ஆணைய உதவி இயக்குனர் ஷூபம் கார்க், மீன்வளத்துறை ஆணையர் பால் பாண்டியன் ஆகியோரது குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. மாநில வேளாண்மைத் துறை இயக்குநர் வி. தெட்சிணாமூர்த்தி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி ஆகியோர் பாதிப்புகளை இக்குழுவினரிடம் விளக்கினர்.

இருநாட்கள் ஆய்வு செய்த பின்னர் பாதிப்புகள் குறித்து மத்திய அரசிடம் அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்கின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT