சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூரில் நள்ளிரவில் வீடு புகுந்து 40 பவுன் நகைகளையும், ரூ.1.74 லட்சம் ரொக்கத்தையும் முகமூடி திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கெங்கவல்லி அருகே வீரகனூர் பேரூராட்சி, குமரன் மலை அடிவாரம் ராயர்பாளையத்தில் காட்டுப் பகுதியில் வசிப்பவர் ராஜேந்திரன் மகன் ஸ்டீபன் (35), விவசாயி. இவர் வேப்பூரிலுள்ள தனியார் பள்ளி பங்குதாரராக உள்ளார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு உள்புறம் தாழிட்டிருந்த கதவை இரும்புக் கம்பியால், முகமூடி திருடர்கள் உடைத்து வீட்டினுள் நுழைந்துள்ளனர்.
அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்கள், சத்தம் கேட்டு திருடர்களைப் பார்த்து பயந்துள்ளனர். பீரோவில் இருந்த நகைகளைத் திருடிய நபர்கள், நகைகளை கேட்டுள்ளனர். உயிர் பயத்தில் வீட்டுப் பெண்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். மொத்தம் 27 பவுன் நகைகள், ரூ.1.20 லட்ச ௹பாயை திருடிய முகமூடி திருடர்கள், அருகே இருந்த விவசாயி குமரன் (72) வீட்டில் இதே போல் புகுந்து அவரது வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளையும், 54 ஆயிரம் ரொக்கத்தையும் திருடியுள்ளனர்.
இரு வீடுகளிலும் மொத்தம் 40 பவுன் நகைகளையும், ரூ.1.74 லட்சம் ரொக்கத்தையும் நள்ளிரவு 1 மணியிலிருந்து 2 மணிக்குள் திருடிக் கொண்டு தப்பியோடி விட்டனர். தகவல் அறிந்த சேலம் எஸ்.பி. தீபா கனிகர் உத்தரவின் பேரில் ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன், வீரகனூர் இன்ஸ்பெக்டர் முருகன் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் கொள்ளைச் சம்பவங்கள் நடந்த வீடுகளில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தடயவியல் நிபுணர்கள், கைரேகைகளை எடுத்துள்ளனர். முகமூடி கொள்ளையர்களை பிடிக்க ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகமூடி கொள்ளையர்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்ளை போன நகை, ரொக்கத்தின் மொத்த மதிப்பு சுமார் 18 லட்சம் ஆகும்.