தமிழ்நாடு

ஜவ்வரிசியில் கலப்படம்: நஷ்டத்தில் மரவள்ளி விவசாயிகள்

30th Dec 2021 12:21 PM

ADVERTISEMENTவெள்ளக்கோவில்: மரவள்ளிக் கிழங்கிலிருந்து தயாரிக்கப்படும் ஜவ்வரிசியில் கலப்படம் செய்யப்படுவதால், மரவள்ளி சாகுபடி விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

மரவள்ளி சாகுபடியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் கூடுதலான பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டு வரப்படுகிறது.

போர்த்துக்கீசியர்களால் இந்தியாவுக்கு மரவள்ளி பயிர் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஓராண்டு சாகுபடிப் பயிர் குறைவான பாசனம், குறைவான செலவில், அதிக மகசூல் தரக்கூடியது. சொட்டு நீர் பாசனமே போதுமானது.

நீண்ட கால ரகமான நாட்டு வெள்ளை, வெள்ளை ரோஸ், முள்ளுவாடி, குங்கும ரோஸ் மற்றும் தற்போதைய தாய்லாந்து ரகம் பரவலாகப் பயிரிடப்படுகிறது. 

ADVERTISEMENT

மரவள்ளிக் கிழங்கு, இதிலிருந்து கிடைக்கும் மாவுப் பொருள், ஜவ்வரிசி ஆகியவை உணவாகவும், மாவுப் பொருளான ஸ்டார்ச் பல தொழிற்சாலைகளின் மூலப் பொருளாகவும் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் 160 ஜவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் ஆலைகள் உள்ளன. கண்ணைப் பறிக்கும் வெள்ளை நிற ஜவ்வரிசிக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. 

இதற்காக தயாரிப்பின் போது ரசாயனப் பொருள்களான துணிகளை வெளுக்கப் பயன்படும் சோடியம் ஹைப்போ குளோரைடு, கால்சியம் ஹைப்போ குளோரைடு, ஹைட்ரோ குளோரிக் அமிலம், கந்தக அமிலம் பயன்படுத்தப்படுகின்றன.

மரவள்ளிக் கிழங்கு மாவுடன், விலை குறைவான ரேஷன் அரிசி மாவு, குருணை அரிசி மாவு, மக்காச்சோள மாவு கலப்படம் செய்யப்படுகிறது. மரவள்ளிக் கிழங்கு இல்லாமலேயே ஜவ்வரிசி தயாரிக்கும் அளவுக்கு கலப்படம் நிறைந்துள்ளது. 

மரவள்ளிக் கிழங்குகளின் பட்டையில் நஞ்சு இருக்கும். இதற்காக பட்டையைச் சீவி விட்டு மாவு அரைக்க வேண்டும். ஆனால் கெட்டித் தன்மைக்காக அப்படியே அரைக்கப்படுகிறது.

கலப்படம் காரணமாக மரவள்ளிக் கிழங்கு உணவு உபயோகம், ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்து விட்டன. தாய்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யும் அவலநிலை நிலவுகிறது. 

இதையும் படிக்க | நுகர்பொருள் வாணிபக் கழகப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு: தஞ்சாவூரில் முதல்வர் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு டன் மரவள்ளிக் கிழங்கு ரூபாய் 14 ஆயிரத்துக்கு விலை போனது. இன்று ரூபாய் 4 ஆயிரத்து 500 க்கு விற்கப்படுகிறது. கட்டுபடியாகாததால் மரவள்ளி விவசாயம் செய்ய முடியவில்லை. வணிகர்களின் லாபத்துக்கு விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர்.

இந்த விலை குறைவுக்கு கலப்படமே முக்கியக் காரணமாகும். 'முள்ளிலே இலை பட்டாலும், இலையிலே முள் பட்டாலும், கிழிவது என்னவோ இலை தான்' என விவசாயிகள் முதல் பலிகடா ஆகி விட்டனர். 

கலப்படம் பல்வேறு நோய்களையும் மக்களுக்கு உருவாக்குகிறது. எனவே மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மரவள்ளி பயன் தர வேண்டுமென்றால் கலப்படத்தைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி தெரிவித்தார்.

இதையும் படிக்க | ஒமைக்ரான் லேசான தொற்று, ஆக்ஸிஜன் தேவையில்லை: எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா

ADVERTISEMENT
ADVERTISEMENT