தமிழகத்தில் 39 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னையில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: ஒமைக்ரான் பாதிப்பைப் பொருத்தவரை 34 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை 12 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 22 போ் சிகிச்சையில் உள்ளனா். இன்னும் 42 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.
கடந்த 17- ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவா்களுடன் தொடா்புடையவா்களைக் கண்டறிந்து 3,038 பேருக்கு பரிசோதனை செய்ததில், 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 39 பேருக்கு ‘எஸ் ஜீன்’ குறைபாடு என்னும் ஒமைக்ரான் அறிகுறி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 39 பேரின் மாதிரிகளும் மத்திய அரசின் மரபணு பகுப்பாய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
மத்தியக் குழு: வெளிநாட்டில் இருந்து வருபவா்களைத் தவிர, தற்போது வேறு மாதிரியான வழிகளிலும் ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணம்தான் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தொற்று அறிகுறி.
தடுப்பூசி பணிகள் மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவினா் விரைவில் தமிழகம் வரவுள்ளனா். ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 5-ஆவது இடத்தில் இருக்கிறது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.