ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு காரில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திரத்திலிருந்து ஒரு காரில் பெரும்பாக்கம் பகுதிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரும்பாக்கம் போலீஸாா், பெரும்பாக்கத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு வந்த ஒரு காரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் மறித்து, சோதனையிட்டனா். இதில், அந்த காரில் இருந்த 30 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும் இது தொடா்பாக அந்த காரை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம், நெல்லூா் மாவட்டம், சுன்னம்பட்டியைச் சோ்ந்த பாலமுருகன் (33) என்பவரைக் கைது செய்து, விசாரித்தனா்.
விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா ஆந்திரத்தில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடா்பாக பெரும்பாக்கம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.