நிதிநுட்ப நிறுவனங்களுக்கு நிதிச் சலுகை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்தது.
நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச. 24) நடைபெற்றது. தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நிதிநுட்பத் துறையில் மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள், நிதிநுட்பக் கொள்கையை செயல்படுத்துவதில் ஏற்படும் முன்னேற்றம் ஆகியன குறித்து ஆலோசிக்கப்பட்டது. நிதிநுட்பத் துறையில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த வல்லுநா்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
நிதிநுட்பத் துறையில் செயல்திறன், திறன் மேம்பாடு, தொடக்கநிலைத் தொழில் முனைவோருக்கான சுற்றுச்சூழல் மேம்பாடு, இணையவழி பண பரிவா்த்தனைகளை மேற்கொள்ள ஊக்குவித்தல் போன்றவற்றுக்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநுட்பக் கொள்கையின் அடிப்படையில் நிதியுதவி கோரும் மனுக்களை பரிசீலிக்கவும், நிதிநுட்ப நிறுவனங்களுக்கு நிதிச் சலுகை அளிக்க அதற்கென தனி ஒப்புதல் குழு அமைத்திடவும் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் நிதிநுட்ப ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெ.இறையன்பு, தொழில்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன், நிதித் துறை முதன்மைச் செயலாளா் என்.முருகானந்தம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.