தமிழ்நாடு

சென்னையில் 15 நாள்களில் 2.16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை

23rd Dec 2021 07:46 PM

ADVERTISEMENT

சென்னையில் 15 நாள்களில் 2.16 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உருமாறிய கரோனா வைரஸ் தொற்று ஒமைக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல நல அலுவலர் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் இன்று ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்றது.
உலக நாடுகளிடையே கொரோனா வைரஸில் மரபியல் மாற்றமடைந்த ஒமைக்ரான் வகை தொற்று பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் குறிப்பாக
சென்னையில் இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதித்த நபர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மரபியல் மாற்றமடைந்த வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளிநாடுகளிலிருந்து சென்னை திரும்பும் நபர்களில் அதிக பாதிப்புள்ள குறிப்பிட்ட 12 நாடுகளிலிருந்து வரும் நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா வைரஸ் தொற்றை பொறுத்தவரையில் அதிகப்படியான பரிசோதனைகளை மேற்கொண்டு தொற்று பாதித்த நபர்களை கண்டறிந்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தால் மட்டுமே பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பது கடந்த கால நிகழ்வுகளில் தெரியவருகிறது. அதனடிப்படையில் தற்பொழுது, ஒமைக்ரான்
வகை தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் தொற்று பாதித்த நபர்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறியுள்ள நபர்களுக்கு கோவிட் தொற்று பரிசோதனை மேற்கொள்ள பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, மண்டல நல அலுவலர்கள் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில், நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் அதிகம் கூடம் வணிக வளாகங்கள், அலுவலகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் வணிகர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் நபர்களுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்பொழுது கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும். வணிகர்களும், பொதுமக்களும் மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
கடந்த 15 நாட்களில் மட்டும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருந்த நபர்கள் என 2,16,808 நபர்களுக்கு கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள நபர்கள் சுயமருத்துவம் எடுக்காமல் உடனடியாக அருகிலுள்ள மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது நகர்ப்புற சமுதாய நல மையத்தில் மருத்துவரை அணுகவும், மருத்துவரின் ஆலோசனைப்படி தேவைப்பட்டால் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியைக் கடைப்பிடித்தல் மற்றும் கைகளை அவ்வப்பொழுது சுத்தம் செய்தல் ஆகியவையே சிறந்த தீர்வு என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க மண்டல மருத்துவ அலுவலர்கள் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
குறிப்பாக, குறைவாக கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள திருவொற்றியூர் மண்டலத்தில் உள்ள குப்பம், சுனாமி குடியிருப்பு, தண்டையார்பேட்டை மண்டலத்தில் உள்ள திலகர் நகர், சுனாமி குடியிருப்பு, பி.கல்யாணபுரம், இராயபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டான்லி நகர், கனால் காலனி, பெரியபாளையத்தம்மன் கோயில், பழைய அமராஞ்சிபுரம், ஆசீர்வாதபுரம், திரு.வி.க.நகர் மண்டலத்தில் உள்ள புளியந்தோப்பு, அன்னை சத்யா நகர், காமராஜர் தெரு, சிவசக்தி நகர், அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள கொரட்டூர், கள்ளிக்குப்பம், அண்ணாநகர் மண்டலத்தில் உள்ள வில்லிவாக்கம், தேனாம்பேட்டை மண்டலத்தில் உள்ள பி.எம்.தர்கா, நடுக்குப்பம், நொச்சிக்குப்பம், ரோட்டரி நகர், அயோத்தியா நகர், மயிலாப்பூர், கோடம்பாக்கம் மண்டலத்தில் உள்ள இராணி அண்ணாநகர், சூளை பள்ளம், கோதைமேடு, அடையாறு மண்டலத்தில் உள்ள ஆதம்பாக்கம், தரமணி, பெருங்குடி மண்டலத்தில் உள்ள கல்லுக்குட்டை ஆகிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 26.12.2021 அன்று நடைபெற உள்ள மெகா தடுப்பூசி முகாமினை கண்காணிக்க 3 மண்டலங்களுக்கு ஒரு கண்காணிப்பு அலுவலர் என 15 மண்டலங்களுக்கு துணை ஆணையாளர் (சுகாதாரம்), மாநகர நல அலுவலர், மாநகர மருத்துவ அலுவலர், கூடுதல் மாநகர நல அலுவலர் மற்றும் கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கல்லூரிகளில் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்யவும், வகுப்பறைகளுக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் கல்லூரி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என ஆணையாளரின் கடிதம் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும்
மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வரும் நபர்களில் கோவிட் தொற்று அறிகுறி உள்ள நபர்கள் அல்லது கரோனா தொற்று உள்ளவராக சந்தேகிக்கப்படும் நபர்கள் குறித்த தகவல்களை நாள்தோறும் கீழ்க்காணும் அட்டவணையின்படி gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இதுதொடர்பாக தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து தகவல்களை பெற மாநகராட்சியின் சார்பில் பூச்சியியல் வல்லுநர்களை கொண்ட 15 ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் பொது மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் கரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்களின் விவரங்களை மாநகராட்சிக்கு தெரிவிக்க தவறினால் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51ன் படி சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, தெரிவித்துள்ளார்.
இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் (சுகாதாரம்) டாக்டர் எஸ்.மனிஷ்,  மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன், மாநகர மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எஸ்.ஹேமலதா, கூடுதல் மாநகர நல அலுவலர்கள், கூடுதல் மாநகர மருத்துவ அலுவலர், மண்டல நல அலுவலர்கள், மண்டல மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

Tags : Corona test
ADVERTISEMENT
ADVERTISEMENT