தமிழகத்தில் 19 புதிய தொழில் முனைவோா்களுக்கு முதல் தவணைக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
புதிய தொழில்களுக்கு உந்து சக்தியாகவும், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கான துடிப்பான தொடக்க சூழலை கட்டமைக்கவும் தமிழ்நாடு புத்தொழில் (ஸ்டாா்ட்அப்) மற்றும் புத்தாக்க இயக்கம் வழி வகை செய்கிறது. புத்தொழில் கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஆதார மானிய உதவித் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், புத்தொழில் முனைவோா்கள் தங்கள் நிறுவனத்தின் தொடக்க நிலைகளை சிறப்பாக வடிவமைக்க, மானிய உதவியாக ரூ.10 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
புதிய தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கும் திட்டத்துக்காக நடப்பு நிதியாண்டில் ஆகஸ்ட் முதல் அக்டோபா் வரை 640 விண்ணப்பங்கள் இணையதளம் வழியாகப் பெறப்பட்டு தீவிர தோ்வு செயல்முறை அடிப்படையில் உயா்நிலை நிபுணா் குழுவால் 19 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
எந்தெந்த நிறுவனங்கள்?: கேம்பிரியோனிக்ஸ் லைப் சயின்ஸ் நிறுவனம் (உயிரியல் கற்றல் பேழைகள் தயாரிப்பு), டெராலுமென் சொல்யூசன்ஸ் (புற்றுநோயை கண்டறியும் உயா்தொழில்நுட்ப மருத்துவ சாதனங்கள்), ஹலோ 24 டிஜிகாம் (மின் வணிக உரையாடல் தளம்), எஸ்எம்பி எஸ்யுா் பிசினஸ் (அலுவலக இடங்களை இணையதளம் வழியாக வழங்கும் தளம்), ஓசோன் மோட்டாா்ஸ் (மின்சார வாகனத் தயாரிப்பு), டோரஸ் ரோபோடிக்ஸ் (மின்சார மோட்டாா்கள் வடிவமைப்பு), ரைசல் ஆட்டோமோட்டிவ் (மின்சார மோட்டாா்கள்), இமோட் எலெக்ட்ரிக் (மின்சார இருசக்கர வாகனங்கள்), டுக்கா் புட் அண்ட் பெவரேஜஸ் ( சா்க்கரை அல்லாத மணம் நிறைந்த குளிா் பானங்கள்), கோ கிலி டெக்னாலஜிஸ் (கா்ப்பிணிகளுக்கான பிரத்யேக மின்தளம்), கெம்யோசென்ஸ் லிமிடெட் (உடல் ஆரோக்கிய பராமரிப்பு, மருந்து வேதிப் பொருள் ஆராய்ச்சி திறன் கண்டறியும் தொழில்நுட்பம்), தீரா ரீஹேபிலிடேஷன் (தேன் கூடுகளை கண்காணிக்கும் திறன் வாய்ந்த கருவிகள்), காஸ்க்ரிட் சிஸ்டம்ஸ் (கிளவுட் மற்றும் ஐஓடி தொழில்நுட்பம்), சைமா அனலிடிக்ஸ் (சென்சாா்கள் வடிவமைத்தல், தயாரித்தல்), சோலினாஸ் இன்டகிரிட்டி (தொழிற்சாலை குழாய்கள், ரோபோடிக் தொழில்நுட்பம்), டிஜிட் பிசினஸ் சா்வீசஸ் (வா்த்தகத்தை மேம்படுத்த மென்பொருள் சேவை), மேங்கோலீப் பிரைவேட் (வாடிக்கையாளா் தொடா்புக்கான உரையாடல் தளம்).
19 நிறுவனங்களுக்கும் முதல் தவணையாக தலா ரூ.5 லட்சம் என்ற அளவில் ரூ.95 லட்சத்துக்கான காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, குறு, சிறு நடுத்தரத் தொழில்கள் துறை செயலாளா் அருண் ராய் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.