மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம்}உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வந்தது. இதனால் மேட்டுப்பாளையம்}குன்னூர் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு மண், பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த மாதம் அக்டோபர் 14 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 21ஆம் தேதி வரை மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் தற்போது மழையின் அளவு குறைந்து, பனியின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்த கால சீதோஷ்ண நிலையை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இதையொட்டி, மலை ரயில் சேவை 2 மாதங்களுக்குப் பின் துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் புதன்கிழமை காலை 7.10 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. மலை ரயில் சேவை துவங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.