தமிழ்நாடு

சாதியப் பாகுபாட்டால் சாலை போட மறுப்பா? அரியலூர் கிராம மக்கள் குற்றச்சாட்டு

22nd Dec 2021 04:43 PM

ADVERTISEMENT


அரியலூரில் பட்டியலின மக்கள் வசிக்கும் வீடுகள் இருக்கும் இடத்தில் மட்டும் சாலை போடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூரிலுள்ள தந்தை பெரியார் நகரில் 200 குடும்பங்கள் வசிக்கின்றன. அங்கு சாலை போட வேண்டும் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இரண்டு மாதங்களுக்கு முன்பு நிதி ஒதுக்கப்பட்டு சாலை போடப்பட்டது. அந்தப் பகுதியின் 10-வது சாலையில் ரூ. 15.50 லட்சம் செலவில் கழிவு நீர் கால்வாயுடன் சாலை போட வேண்டும்.

எனினும், அந்த சாலை முழுமையாகப் போடப்படாமல் பட்டியலின மக்கள் வசிக்கும் வீடுகளின் முன்பு மட்டும் சாலை போடவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் மற்றும் அருந்ததியர்கள் உள்ளிட்ட சமூகத்தினர் இந்த விவகாரத்தை குழுமூர் பஞ்சாயத்து தலைவர் மற்றும் சாலை ஒப்பந்ததாரரிடம் எழுப்பியுள்ளனர். எனினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையும் படிக்கஅரியலூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

ADVERTISEMENT

அங்கு வசிக்கும் ஜெயந்தி என்பவர் இதுபற்றி கூறுகையில், "இங்கு பல ஆண்டுகளாக சாலை போடப்படாமல் இருந்தது. புதிதாக சாலை போட்டது எங்களுக்கு மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி எங்களுக்கு நீடிக்கவில்லை. அதிகாரிகள் புத்திசாலித்தனமாக எங்கள் வீடுகளுக்கு முன்பு மட்டும் சாலை போடாமல் விட்டுவிட்டனர். நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வாறு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபற்றி எங்கு புகாரளிக்க வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை."

பக்கத்துத் தெருவில் சாலை முழுமையாகப் போடப்பட்டுள்ளது. பிறகு ஏன் எங்களுக்கு மட்டும் முழுமையாக சாலை போடவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டதற்கு மரியாதைக் குறைவாகப் பதிலளிக்கின்றனர். இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்."

அதே பகுதியில் வசிக்கும் அமுத கண்ணன் என்பவர் கூறுகையில், "நாங்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் சாலை போடாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்" என்றார்.

இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கத்தைத் தொடர்புகொண்டு பேசியபோது, "மழை காரணமாக சில வீடுகளுக்கு முன்பு எங்களால் சாலை போட முடியவில்லை. வேறு எந்தக் காரணமும் இல்லை. அந்தப் பகுதியில் முழுமையாக சாலை போடுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்றார் அவர்.

Tags : ARIYALUR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT