சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் 3-10-1898-இல் பிறந்தார் தமிழ்க் கடல் இராய. சொக்கலிங்கம்.
சொ.முருகப்பா, இராய.சொக்கலிங்கம் உள்ளிட்ட சிலர் ஒன்றிணைந்து காரைக்குடியில் 1917-ஆம் ஆண்டு "இந்து மதாபிமான சங்கம்' என்ற அமைப்பை நிறுவினர்.
"இந்து மதாபிமான சங்கம் என்றால் அது மதப் பணி புரிகிற சங்கம் என்று எண்ணிவிட்டீர்களா? அப்படி எண்ணினால் அது தவறு. காரைக்குடிக்கே, ஏன் செட்டிநாட்டுக்கே தேசிய உணர்வை ஊட்டி, ஜாதி மத பேதங்களைத் தகர்த்து சமத்துவ நெறியை நாட்டி தொண்டு செய்யும் நல்லோர் பலரை ஆக்கியது அச்சங்கமே' என்று கம்பன் அடிப்பொடி சா.கணேசன் பதிவு செய்துள்ளார். அந்தச் சங்கத்தின் தலைவராக விளங்கியவர் இராய.சொ.
1919-இல் மகாகவி பாரதியார் காரைக்குடி வந்திருந்து இந்து மதாபிமான சங்க விருந்தினராக மூன்று நாள்களுக்கும்மேல் தங்கி சொற்பொழிவு நிகழ்த்தியும் தனது பாடல்களைப் பாடியும் தேசிய எழுச்சியை உருவாக்கியிருந்தார்.
1920-இல் தியாகி சுப்பிரமணிய சிவா காரைக்குடியில் தங்கி தனது பிரசாரத்தின் மூலம் விடுதலை உணர்வை விதைத்து வந்தார்.
1921-இல் காந்தியடிகள் காரைக்குடிக்கு வந்திருந்தார். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். இவை அனைத்திலும் பங்கேற்ற இராய.சொ ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரமாகக் களமிறங்கினார். காந்தியத்தில் ஊறித் திளைத்தவர். 1924-இல் "காந்தி பிள்ளைத்தமிழ்' என்ற நூலை எழுதினார்.
1932-இல் நடைபெற்ற சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டார். ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
காந்தியடிகளைப் பற்றி சிறையில் இராய.சொ. எழுதிய பாடல்கள் ஏராளம். காந்தி அந்தாதி, காந்தி நான்மணிமாலை, காந்தி திருப்பள்ளியெழுச்சி, காந்தி புகழ் பாடுமின், காந்தி சொற்பெருமை, காந்தி திருப்புகழ் என்று காந்தியடிகள் பற்றி மட்டும் பல கட்டங்களில் மொத்தம் 960 பாடல்களை எழுதியுள்ளார். இவற்றைத் தொகுத்து "காந்தி கவிதை' என்ற நூலாக அழகப்பா கல்லூரி பின்னர் வெளியிட்டது.
27-1-1934-இல் காந்தியடிகள் இராய.சொவின் இல்லத்திற்கு வருகை புரிந்தார். 1938 முதல் 1941 வரை காரைக்குடி நகரமன்றத் தலைவராக விளங்கினார். காக்கிநாடா, பெல்காம், பம்பாய் அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் பிரதிநிதியாகப் பங்கேற்றார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயற்குழு உறுப்பினர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் என முக்கிய கட்சிப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.
விடுதலை உணர்வை மேம்படுத்தும் "ஊழியன்' என்ற இதழின் ஆசிரியராக 1922 முதல் 1940 வரை விளங்கியுள்ளார் இராய.சொ.
ஆழமும் அழகும் கலந்த தனித்துவம்மிக்க அரசியல் மற்றும் இலக்கியச் சொற்பொழிவாளர் இராய.சொ. ஆழ்ந்தகன்ற தமிழறிவே அவரின் அறுபதாம் ஆண்டு நிகழ்வில் அவருக்கு "தமிழ்க் கடல்' எனும் பட்டம் சூட்டக் காரணமாயிற்று. விடுதலைக்கு வித்திட்ட காந்தியச் செம்மல் இராய.சொ. 1974 செப்டம்பர் 30-ஆம் தேதி 76-ஆவது வயதில் காலமானார்.