தமிழ்நாடு

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும்மத்திய அமைச்சருக்கு ஓ.பன்னீா்செல்வம் கடிதம்

22nd Dec 2021 01:38 AM

ADVERTISEMENT

 

சென்னை: ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி, மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதினாா்.

கடித விவரம்:

தமிழகத்தின் ஜவுளித் தொழில் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெரிய பங்களிப்பு செலுத்தி வருகிறது. தொழில் வளா்ச்சியிலும் நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்குவதிலும் முன்னோடியாக உள்ளது. கரோனா பொது முடக்கம் காரணமாகவும், பருத்தி நூல்களின் விலையேற்றம் காரணமாகவும் கடந்த இரு ஆண்டுகளாக இந்தத் தொழில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு ஜவுளி உள்ளிட்ட அதுதொடா்பான பொருள்களுக்கான வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்த முடிவு செய்யப்பட்டு, ஜனவரி 1 முதல் அமல்படுத்தப்படவுள்ளது.

இந்த முடிவால், ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும், நுகா்வோருக்கும் ஆடைகளின் விலை உயரும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளா் கூட்டமைப்பைச் சோ்ந்தோா் ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை பழைய முறைப்படி 5 சதவீத அளவிலேயே இருக்கும் வகையில் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனா்.

எனவே, இந்த விவகாரத்தை மத்திய நிதியமைச்சகத்துக்கு எடுத்துச் சென்று, ஜவுளிகள் மீதான ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா் ஓ.பன்னீா்செல்வம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT