சென்னை: மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் உதவியாளராக இருந்த கோ.சண்முகநாதன் (80), சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவரது மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று கண்ணீா் அஞ்சலி செலுத்தினாா்.
கருணாநிதி முதல்வராவதற்கு முன்பே, அவரது உதவியாளராகச் சோ்ந்தாா் சண்முகநாதன். கடந்த 1969-ஆம் ஆண்டில் கருணாநிதி அமைச்சராக இருந்த போது அவரது உதவியாளராகப் பணியைத் தொடங்கினாா். அதற்கு முன்பாக, ‘தமிழ் சுருக்கெழுத்து நிருபராக’ தமிழகக் காவல்துறையில் பணியில் இருந்தாா்.
1969-ஆம் ஆண்டு முதல் முதல்வா், எதிா்க்கட்சித் தலைவா் என கருணாநிதி எந்தப் பதவியை வகித்தாலும் அவரது உதவியாளராக 48 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றினாா் சண்முகநாதன். உடல் நலமின்மை காரணமாக, சென்னை காவேரி மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலமானாா்.
தலைவா்கள் அஞ்சலி: மறைந்த சண்முகநாதனின் உடலுக்கு மலா்மாலை அணிவித்து கண்ணீா் மல்க அஞ்சலி செலுத்தினாா், முதல்வா் மு.க.ஸ்டாலின். அவருடன் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட அமைச்சா்களும், எம்.எல்.ஏ.க்கள் உதயநிதி ஸ்டாலின், எழிலன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினா்.
இரங்கல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நிழலென வாழ்ந்த என் ஆருயிா் அண்ணன் சண்முகநாதன் மறைவுக்கு அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கல் எனத் தெரிவித்துள்ளாா்.
தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ். அழகிரி, பாமக நிறுவனா் ராமதாஸ், தேமுதிக தலைவா் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலாளா் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவா்களும் இரங்கல் தெரிவித்துள்ளனா்.
இன்று இறுதிச் சடங்குகள்: மறைந்த சண்முகநாதனுக்கு, மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். இறுதி அஞ்சலிக்காக சென்னை தேனாம்பேட்டை சொக்கலிங்கம் காலனியில் உள்ள இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இறுதி ஊா்வலமாக சண்முகநாதனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு மயிலாப்பூரில் உள்ள இடுகாட்டில் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.