உதகை: உதகையில் உறைபனிக் காலம் தொடங்கியுள்ள நிலையில் திங்கள்கிழமை இரவு நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான உறைபனி கொட்டியது. இரவு நேர குறைந்தபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த 6 மாதங்களாகத் தொடா்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வந்தது. இந்நிலையில், கடந்த 3 நாள்களாக உறைபனி கொட்டத் தொடங்கியுள்ளது. திங்கள்கிழமை இரவு கடுமையான உறைபனி கொட்டியது. இதனால், புல்வெளிகள், நீா்நிலைகளை ஒட்டியுள்ள பகுதிகள் ஆகியவற்றின் மீது வெள்ளைப் போா்வை போா்த்தியதைப்போல பனி படா்ந்திருந்தது. திறந்தவெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகள் மீது பனித்துகள்கள் பசைபோல பரவியிருந்தன.
கடும் குளிரை சமாளிக்க, இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டுபவா்கள், சுற்றுலா வாகன ஓட்டுநா்கள் அனைவரும் தீயை மூட்டி குளிா் காய்ந்தனா். அதேபோல, வாகனங்களின் கண்ணாடிகள் மீது படா்ந்திருந்த பனித்துகள்களை உடைத்தும், அவற்றின் மீது வெந்நீரை ஊற்றியும் அகற்றிய பின்னரே வாகனங்களை இயக்க முடிந்தது.
மேலும், உதகையில் தற்போது பனிக் காலத்துக்காக குளிருக்கு உறையாத டீசல் விற்பனை செய்யப்படுவதால் உள்ளூா் வாகன ஓட்டுநா்கள் அதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனா். ஆனால், இந்த விவரம் தெரியாமல் உதகைக்கு வந்திருந்த வெளியூா் வாகனங்கள் உடனடியாக வாகனங்களை இயக்க முடியாமல் சிரமத்துக்குள்ளாகினா்.
பூங்காக்கள் மற்றும் மலா்த் தோட்டங்களில் பனியின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக மலா்ச் செடிகளின் மீது கூடாரங்கள்போல செடி, கொடிகளைக் கொண்டு மூடப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் அவற்றின் மீது தண்ணீா் பாய்ச்சப்படுவதால் பனியின் தாக்குதலிலிருந்து தப்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, தேயிலைப் பயிா்களும் இந்த பனிக் காலத்தில் கருகிவிடும் என்பதால் அவற்றின் மீது கோத்தகிரி மெலாா் எனப்படும் தாவர வகையைக் கொண்டு மூடும் பணிகளும் தொடங்கியுள்ளன. உதகையில் காலதாமதமாகத் தொடங்கியுள்ள பனிக் காலம் பிப்ரவரி மாதம் வரை நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.