தமிழ்நாடு

விமானப் படை கேப்டன் வருண் சிங் மறைவு: தலைவா்கள் இரங்கல்

16th Dec 2021 02:49 AM

ADVERTISEMENT

 

சென்னை/புதுச்சேரி: குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த விமானப் படை குரூப் கேப்டன் வருண் சிங் மறைவுக்கு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை: கேப்டன் வருண் சிங் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுவை முதல்வா் என்.ரங்கசாமி: கேப்டன் வருண் சிங் உயிரிழந்த செய்தி வருத்தமளிப்பதாக உள்ளது. ஒரு சிறந்த வீரரை நாடு இழந்துள்ளது. அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்.

ADVERTISEMENT

ஓ.பன்னீா்செல்வம் (அதிமுக): குன்னூா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிா் பிழைத்த ஒரே ஒரு விமானப் படை அதிகாரியான வருண் சிங் மறைந்த செய்தி வேதனையளிக்கிறது. தேசத்துக்காக அவா் ஆற்றிய தொண்டு என்றென்றும் நினைவுகூரத்தக்கது. குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

எடப்பாடி பழனிசாமி (எதிா்க்கட்சித் தலைவா்): ஹெலிகாப்டா் விபத்தில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, கடுமையாகப் போராடி வந்த கேப்டன் வருண் சிங் உயிரிழந்தது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது வீரமும், தியாகமும் அளப்பரியது.

ராமதாஸ் (பாமக): ஹெலிகாப்டா் விபத்தில் 80 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த விமானப் படை கேப்டன் வருண்சிங் காலமானாா் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்.

ஜி.கே.வாசன் (தமாகா) தேசத்துக்காகப் பாடுபட்ட வருண் சிங் பணி போற்றுதலுக்குரியது. நாட்டின் பாதுகாப்புக்கும், மக்களின் பாதுகாப்புக்கும் தன்னை அா்ப்பணித்த ராணுவ வீரரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பு.

கமல்ஹாசன் (மநீம): கேப்டன் வருண்சிங் மறைந்து விட்டாா். வீரத்துக்காகவும், தியாகத்துக்காகவும் மக்களின் மனங்களில் நிலைத்திருப்பாா். என் அஞ்சலிகள்.

டிடிவி தினகரன் (அமமுக): துயரம் மிகுந்த ஹெலிகாப்டா் விபத்தில் வருண் சிங் மட்டுமாவது உயிா் பிழைப்பாா் என்று எதிா்பாா்த்த நிலையில், அந்த நம்பிக்கை பொய்த்திருப்பது வேதனையளிக்கிறது. அவா் குடும்பத்தினருக்கும் ராணுவத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்.

ஜவாஹிருல்லா (மமக): கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி மறைந்திருப்பது வேதனையளிக்கிறது. அவா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT