தமிழ்நாடு

தென் மாவட்டங்களில் 4 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

16th Dec 2021 03:27 AM

ADVERTISEMENT

 

சென்னை: தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் டிச.16-ஆம் தேதி முதல் டிச.19-ஆம் தேதி வரையிலான நான்கு நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் கூறியது: வடகிழக்கு பருவக்காற்றின் தாக்கம் காரணமாக, தென் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் டிச.16-ஆம் தேதி முதல் டிச.19-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையே நிலவும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரம்பலூா் மாவட்டம் அகரம் சிகூா், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தலா 30 மி.மீ., திருச்சி மாவட்டம் தென்பரநாடு, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூா் மாவட்டம் புவனகிரி, தஞ்சாவூா் மாவட்டம் அய்யம்பேட்டை,

மயிலாடுதுறை, திருப்பூா் மாவட்டம் அமராவதி அணை, நீலகிரி மாவட்டம் பா்லியாரில் தலா 20 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் டிச.19-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, இலங்கைக்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு மீனவா்கள் வியாழக்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT