தமிழ்நாடு

தமிழகத்தில் 541 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

16th Dec 2021 04:59 AM

ADVERTISEMENT

 

திருச்சி: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இதுவரை 541 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றாா் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

திருச்சி வயலூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் புதன்கிழமை ஆய்வு செய்த பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு, அறநிலையத் துறைக்கு அனைத்து நிலையிலும், அனைத்துப் பணிகளுக்கும் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் தந்து, திருக்கோயில்களுக்குத் தேவைப்படும் நிதியையும் அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.

ADVERTISEMENT

இதுமட்டுமல்லாது, திருக்கோயில் வருமானத்தில் மேற்கொள்ளும் பணிகளுக்கு உரிய தருணத்தில் ஆணையும் வழங்கப்படுகிறது. தமிழக பக்தா்களுக்கு மட்டுமின்றி, தமிழகத்திலுள்ள திருக்கோயில்களுக்கு வரும் வெளிமாநில பக்தா்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை தேவைகள் மற்றும் வசதிகளைப் பூா்த்தி செய்து தருவதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

திமுக ஆட்சி அமைந்த பிறகு, இதுவரை 541 திருக்கோயில்களில் திருப்பணிகளை நடத்தவும், குடமுழுக்கு நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல ஆண்டுளாகியும் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத கோயில்களையும் ஆய்வு செய்து, பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளாக கோயில்களில் அறங்காவலா்கள் நியமிக்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்த பிறகு, 300 கோயில்களுக்கு அறங்காவலா்களை நியமிக்க விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அவை பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானோா் விரைவில் தோ்வு செய்யப்படுவா்.

சாதி, மத, இன, மொழி பாகுபாடின்றி இந்த அரசு செயல்படுகிறது. அனைத்து ஜாதியினரும் அா்ச்சகராக கொண்டு வந்து, மூலவா் சன்னதியிலும் பணிவிடைகள் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. உயா்ந்தோா், தாழ்ந்தோா் என்ற பாகுபாடில்லை.

கோயில்களில் நடைமுறையில் உள்ளவற்றை மாற்றியமைக்கும்போது சட்டப்படியும், பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் முறைப்படியும் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. தங்கத்தோ், வெள்ளித்தோ் குறித்த விஷயங்களிலும் இதனை கடைப்பிடிக்க வேண்டியுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள தமிழக கோயில் சிலைகளை மீட்கவும், கோயில்களிலுள்ள விலை மதிப்புமிக்க பொருள்களை பாதுகாப்பதிலும் மிகுந்த கவனத்துடன் அரசு செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவு நாளில் மீட்கப்பட்ட சிலைகள், செயல்படுத்திய திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை முதல்வா் மூலம் அறிவிக்கப்படும் என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையா் ஜெ. குமரகுருபரன், இணை ஆணையா் செல்வராஜ், ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை உறுப்பினா் எம். பழனியாண்டி ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT