தமிழ்நாடு

தமிழகத்தின் தியாக தீபங்கள் -122: டி.எஸ்.சொக்கலிங்கம்

16th Dec 2021 05:19 AM | -த.ஸ்டாலின் குணசேகரன்

ADVERTISEMENT


ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 1899 மே 3-இல் பிறந்தவர் டி.எஸ்.சொக்கலிங்கம். 

வஉசி, சுப்பிரமணிய சிவா கைதையொட்டி திருநெல்வேலியில் ஏற்பட்ட எழுச்சி இவரிடம் விடுதலை உணர்வை கிளர்ந்தெழச்செய்தது. இவரின் மூத்த சகோதரர் டி.எஸ்.சிதம்பரம் பிள்ளை, ஆஷ் கொலை வழக்கில் கைதானார்.  

1917-இல் சபர்மதி ஆசிரமத்திற்கு யாரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டார் சொக்கலிங்கம். காந்தியடிகளைச் சந்தித்தார். ஆசிரமத்திலேயே தங்கிவிட்டார். காந்தியடிகளுடன் வெளியூர்களுக்குச் செல்லும் அளவுக்கு அவரின் நம்பிக்கையையும் பெற்றிருந்தார். அவர் இருக்கும் இடம் தெரிந்து அவரின் தாயார் சபர்மதிக்கே சென்று காந்தியடிகளிடம் சொல்லி அவரைத் திரும்ப அழைத்து வந்துவிட்டார். அதன்பிறகும் காந்தியடிகளுடன் தொடர்பிலிருந்தார்.
"குற்றாலம் அருவியில் வெள்ளையர் குளிக்கும் நேரத்தில் மற்றவர்கள் குளிக்கக்கூடாது' என்றிருந்த நிலையை எதிர்த்துப் போராடினார். இவர் பின்னால் மக்கள் திரண்டனர். போராட்டம் வெற்றியடைந்தது. 

ரெüலட் சட்ட எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டார். திருநெல்வேலி மாவட்ட அரசியல் மாநாட்டை முன்னின்று நடத்தினார். திருவிகவை அந்த மாநாட்டிற்கு தலைமை வகிக்க அழைத்திருந்தார். பேசும் திறனும் எழுதும் ஆற்றலும் இவருக்குள்ளிருந்து பிரவாகமாக வெளிப்பட்டது.

ADVERTISEMENT

டாக்டர் பெ.வரதராஜுலு நாயுடுவை தென்காசிக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தினார். நாயுடுவின் பேச்சிலும் எழுத்திலும் இவருக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. நாயுடுவுடன் சேலம் சென்ற இவர் "தமிழ்நாடு' வார இதழின் ஆசிரியரானார். இதழின் தலைமையகம் சென்னைக்கு மாறியது. தினசரி இதழானது "தமிழ்நாடு'.

1931-இல் "தமிழ்நாடு' இதழிலிருந்து விலகி "காந்தி' என்ற இதழைத் தொடங்கினார். 1932-இல் காந்தியடிகளின் கைது செய்தியைத் தடையை மீறி வெளியிட்டதற்காக 6 மாத சிறைத் தண்டனையும் ரூ. 500 அபராதமும் விதிக்கப்பட்டது. 1934 செப்டம்பர் 11-இல் பாரதி நினைவு நாளில் "தினமணி' நாளிதழ் வெளிவந்தது. அதன் முதல் ஆசிரியராக சொக்கலிங்கம் பொறுப்பேற்றார். இவரது ஆசிரியத்துவத்தில் "தினமணி' வலிமைமிக்க தேசிய நாளிதழாக பரிணாமம் பெற்றது. "தினமணி' ஆசிரியராக இருந்தவாறே 1937 சட்டப் பேரவைத் தேர்தலில் தென்காசியில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 

1940 தனிநபர் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதால் எட்டுமாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் தினமணியிலிருந்து விலகி "தினசரி' ,  "பாரதம்' இதழ்களைத் தொடங்கினார். அவை நின்ற பின்னர் "நவசக்தி' ஆசிரியரானார். பண்டித நேரு, சுபாஷ் சந்திரபோஸ், காமராஜர் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். "எனது முதல் சந்திப்பு' என்ற இவரது நூல் இவரை கம்பீரமாக வெளிப்படுத்துகிறது.

"தினமணி' நாளிதழே அவருடைய நிரந்தரச் சின்னமாகும்'  என்று எழுத்தாளர் விக்கிரமன் பதிவு செய்துள்ளார். 

பன்முகப் பேராளுமையுடன் விளங்கிய டி.எஸ். சொக்கலிங்கம் 1966 ஜனவரி 9-ஆம் தேதி தனது 67-ஆவது வயதில் மறைந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT